This Article is From May 26, 2020

“லாக்டவுன் தோல்வி… அடுத்து என்ன?”- மத்திய அரசை கேள்விகளால் துளைக்கும் ராகுல் காந்தி!!

இந்த மாதத் தொடக்கத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த, பொருளாதாரத் தொகுப்பு அறிவிப்பிலும் எதிர்பார்த்த அம்சங்கள் இருக்கவில்லை என்கின்றார் ராகுல் காந்தி. 

முதன்முறையாக நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்தபோது நாட்டில், 496 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. 9 பேர் உயிரிழந்திருந்தனர்.

ஹைலைட்ஸ்

  • ஊரடங்கு உத்தரவு முற்றிலும் தோல்வியடைந்துள்ளது: ராகுல்
  • மத்திய அரசு அறிவித்த பொருளாதார சீர்திருத்தங்கள் ஏமாற்றமே: ராகுல்
  • மே இறுதிக்குள் கொரோனாவிலிருந்து விடுபடுவோம் என்றார் மோடி: ராகுல்
New Delhi:

காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியான ராகுல் காந்தி, கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய அரசிடம் உள்ள அடுத்தக்கட்ட திட்டம் என்ன என்பது இன்று கேள்வி எழுப்பியுள்ளார். அவர், “பிரதமர் நரேந்திர மோடி, மே மாத இறுதிக்குள் கொரோனா தொற்று குறைந்துவிடும் என்று தெரிவித்தார். ஆனால், கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துதான் வருகிறது,” என்று குற்றம் சாட்டியுள்ளார். 

வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலம் பேசிய ராகுல், “தேசிய அளவிலான ஊரடங்கு உத்தரவு என்பது மிகப் பெரிய தோல்வியாக முடிந்துள்ளது. தொடர்ந்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பன்மடங்கு அதிகரித்து வரும் நிலையில், அதை எதிர்கொள்ள மத்திய அரசிடம் என்னத் திட்டம் உள்ளது? பிரதமர் மோடி எதிர்பார்த்தது போல கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருக்கவில்லை.

உலகிலேயே வைரஸ் தொற்று மிகத் தீவிரமாக பரவி வரும் நேரத்தில் கட்டுப்பாடுகளில் இந்தியா மட்டும்தான் தளர்வுகள் அறிவித்துள்ளன,” என்றார். 

தனது ட்விட்டர் பக்கத்திலும் இந்த விவகாரம் குறித்து ராகுல், “இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்திய அளவிலான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியபோது, 21 நாட்களில் கொரோனா போரில் வெற்றி காண்போம் என்றார் மோடி. அவர் அறிவித்ததிலிருந்து இப்போது 60 நாட்கள் கடந்துவிட்டன. தினம் தினம் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. லாக்டவுன் இந்த தொற்றை எந்த விதத்திலும் குறைத்துவிடவில்லை. அரசுக்கு எனது ஒரேயொரு கேள்வி, அடுத்து என்ன? என்பதுதான்” என்று கருத்திட்டுள்ளார். 

முதன்முறையாக நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்தபோது நாட்டில், 496 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. 9 பேர் உயிரிழந்திருந்தனர். ஆனால் இப்போது, 1.4 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 4,000-க்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். 

ஏப்ரல் மாதம் முதலே, ஊரடங்கு உத்தரவுகளில் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவித்து வருகிறது மத்திய அரசு. ‘சுகாதாரத்திற்கும் பொருளாதாரத்திற்கும் ஒரு சமநிலை இருக்க வேண்டும்' என்று கூறி இந்த தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

மேலும் ராகுல், “மீண்டும் இந்தியாவை செயல்பட வைக்க என்னத் திட்டம் உள்ளது? நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது? புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எப்படி உதவுவார்கள்? மாநில அரசுகளுக்கு எப்படி உதவி செய்வார்கள்? சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மீட்க என்னத் திட்டங்கள் உள்ளன?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார். 

இந்த மாதத் தொடக்கத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த, பொருளாதாரத் தொகுப்பு அறிவிப்பிலும் எதிர்பார்த்த அம்சங்கள் இருக்கவில்லை என்கின்றார் ராகுல் காந்தி. 

முடிவாக ராகுல், “நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபி-யில் 10 சதவீதம் இந்த பொருளாதாரத் தொகுப்பில் இடம் பெறும் என்றார். ஆனால், உண்மையில் 1 சதவீதத்துக்கும் குறைவான ஜிடிபி அளவுக்குத்தான் பொருளாதாரத் தொகுப்பு உள்ளது. அதுவும் பெரும்பாலும் கடன்களாகவே அறிவிக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு நேரடியாக பணம் சென்று சேரும் அளவுக்கு எந்த அறிவிப்புகளும் அதில் இல்லை,” என்று குற்றம் சாட்டியுள்ளார். 

.