This Article is From Jan 31, 2020

சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க அதிரடி நடவடிக்கை! - சீனா பறக்கும் சிறப்பு விமானம்!

Coronavirus: மருத்துவர்கள் மற்றும் இதர குழுவினர் முழு பாதுகாப்புடன் கூடிய முகமூடிகளை அணிந்து செல்வார்கள். மேலும் அவர்கள் விமானத்தை விட்டு வெளியேறுவதைத் தவிர்க்கவும், நோய்த்தொற்று இல்லாதவர்களை மட்டும் விமானத்திற்கு அனுமதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க அதிரடி நடவடிக்கை! - சீனா பறக்கும் சிறப்பு விமானம்!

சீனாவில் இருந்து இந்தியர்களை மீட்க ஏர் இந்தியாவின் போயிங் 747 ரக விமானம் தயாராக வைக்கப்பட்டுள்ளது.

New Delhi:

வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து, சீனாவின் வுஹான் பகுதியில் சிக்கியுள்ள 400க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்க அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஏர் இந்தியா விமானம் டெல்லியில் இருந்து இன்று பிற்பகல் சீனா புறப்படுகிறது. 

இது போன்ற நோக்கத்திற்காக மும்பையில் வைக்கப்பட்டுள்ள போயிங் 747 ஜம்போ ஜெட் விமானம், டெல்லி சென்று அங்கு சுகாதார அமைச்சகத்தினால் தயாராக வைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவக் கருவிகளை வாங்கிக்கொண்டு சுமார் ஆறு மணி நேரத்தில் வுஹானை அடைகிறது. பின்னர் அங்கிருந்து 2 முதல் மூன்று நேரங்களில் புறப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, அதிகாலை 2 மணிக்குள் இந்தியா திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது. 

இதையடுத்து, வுஹானில் இருந்து இந்தியா மீட்டு வரப்படும் இந்தியர்கள் 14 நாட்கள் டெல்லி மற்றும் மானேசரில் உள்ள மையங்களில் தனிமைப்படுத்தி வைக்கப்படுவார்கள். தொடர்ந்து, அவர்களுக்கு எந்த நோய் தொற்று ஆபத்தும் இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இந்த விமானத்தில் 5 மருத்துவர்களும், ஒரு உதவியாளரும் செல்கின்றனர். மேலும், மத்திய சுகாதார அமைச்சகத்தினால் தயாராக வைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவக் கருவிள் மற்றும் பாதுகாப்பு முகமூடிகள், கையுறைகள் மற்றும் இதர மருந்துகளுடன் அவர்கள் பயணம் செய்ய இருக்கிறார்கள். 

மருத்துவர்கள் மற்றும் இதர குழுவினர் முழு பாதுகாப்புடன் கூடிய முகமூடிகளை அணிந்து செல்வார்கள். மேலும் அவர்கள் விமானத்தை விட்டு வெளியேறுவதைத் தவிர்க்கவும், நோய்த்தொற்று இல்லாதவர்களை மட்டும் விமானத்திற்கு அனுமதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

தொடர்ந்து, இந்த குழு இந்தியா திரும்பியதும், மீட்க சென்ற பைலட்டுகளும், மருத்துவர்களும், பொறியாளர்களும் என அனைத்து குழுவினரும், ஒரு வாரத்திற்கு மேல் வீட்டிலே தனிமைப்படுத்தப்படுவார்கள். அவர்களுக்கு நோய் தொற்று அறிகுறி தென்பட்டால், அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள். 

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை தொடர்ந்து, சர்வதேச சுகாதார அவசரநிலை பிரகடனம் செய்வதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. 

இதனிடையே, நேற்றைய தினம் இந்தியாவில் முதலாவதாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. நோய்த்தொற்று ஏற்பட்டவர் வுஹான் பல்கலைக்கழத்தில் இருந்து திரும்பி கேரள மாணவி ஆவார். தொடர்ந்து, அவரது உடல்நிலை சீராக உள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். 

மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேக்கப்படும் மேலும் 3 பேர் கேரளாவில் தனியறையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 800க்கும் அதிகமானோர் வீட்டிலே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வைரஸ் அறிகுறிகள் உள்ளவர்கள் டெல்லி மற்றும் மும்பையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

.