This Article is From Mar 28, 2020

”வைரஸை பரப்புவோம்” என சர்ச்சை கருத்து: இன்போசிஸ் நிறுவன ஊழியர் கைது!

கர்நாடகாவில் 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை அங்கு கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கர்நாடகாவிலே கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டது.

”வைரஸை பரப்புவோம்” என சர்ச்சை கருத்து: இன்போசிஸ் நிறுவன ஊழியர் கைது!

கொரோனா வைரஸ் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த அந்த மென்பொறியாளரை பெங்களூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • ”வைரஸை பரப்புவோம்” என சர்ச்சை கருத்து
  • இன்போசிஸ் நிறுவன ஊழியர் கைது
  • பணிநீக்கம் செய்தது இன்போசிஸ் நிறுவனம்
Bengaluru:

பெங்களூரில் சமூகவலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த இன்போசிஸ் நிறுவன ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

நாடு முழுவதும் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் 800க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 19க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பெங்களூரில் முஜீப் முகமது (25) மென்பொறியாளரான இவர் சமூகவலைத்தளமான பேஸ்புக்கில், ''கைகோர்ப்போம், வீடுகளை விட்டு வெளியே பொது இடங்களுக்குச் சென்று முகத்தை மூடாமல் தும்முவோம். வைரஸை பரப்புவோம்'' என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டிருந்தார். 

இதுதொடர்பாக பெங்களூர் காவல்துறை இணை ஆணையர் சந்தீப் பட்டீல் கூறும்போது, பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டும், வைரஸை பரப்ப வேண்டும் என்று சர்ச்சைகுரிய வகையில் பதிவிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். முஜீப் என்ற அந்த இளைஞர் மென்பொறியியல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். 

இதுதொடர்பாக முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் தனது ட்வீட்டர் பதிவில் கூறும்போது, எங்களது ஊழியரின் அந்த பேஸ்புக் பதிவு, பொறுப்பான சமூக பகிர்வுக்கான உறுதிப்பாட்டிற்கும், நடத்தை நெறிமுறைகளுக்கும் எதிரானது. 

எங்களது நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியரின் சமூகவலைத்தள பதிவு குறித்த விசாரணையை முடித்துள்ளோம். மேலும், நாங்கள் இதனை அடையாளத்தைத் தவறுதலாகப் பயன்படுத்திய வழக்கு அல்ல என்று நாங்கள் நம்புகிறோம். 

அந்த ஊழியரின் சமூகவலைத்தள பதிவானது, இன்போசிஸ் நிறுவனத்தின் நடத்தை விதிமுறைகளுக்கும், சமூக பகிர்வுக்கான அதன் உறுதிப்பாட்டிற்கும் எதிரானது. 

இன்போசிஸ். இத்தகைய செயல்களுக்கு சகிப்புத்தன்மையற்ற கொள்கையைக் கொண்டுள்ளது, அதன்படி, அந்த ஊழியரை பணிநீக்கம் செய்துள்ளோம், ”என்று அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கொரோனா வைரஸூக்கு எதிரான இன்போசிஸ் நிறுவனத்தின் முதல் நடவடிக்கை இதுவல்ல. ஏற்கனவே, ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு அறிகுறி இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து, அந்நிறுவனத்தின் அலுவலக கட்டிடம் ஒன்றை காலி செய்தது.  

கர்நாடகாவில் 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை அங்கு கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கர்நாடகாவிலே கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டது. 

.