சர்வதேச அளவில் கொரோனா தொற்று அளப்பரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவிலும் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அந்நாட்டில் கொரொனா தொற்றால் 5 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்னான, வைராலஜிஸ்ட் கீதா ராம்ஜி கொரோனா தொற்றுக்கு மரணமடைந்திருக்கிறார். இவர் தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட வைரஸ் தொற்றால் மரணமடைந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் நபராவார்.
64 வயதான எம்.எஸ்.ராம்ஜி, தென்னாப்பிரிக்காவின் டர்பனில் உள்ள தென்னாப்பிரிக்க மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (SAMRC) அலுவலகங்களின் மருத்துவ பரிசோதனை பிரிவு முதன்மை புலனாய்வாளராகவும், எச்.ஐ.வி தடுப்பு ஆராய்ச்சி பிரிவின் பிரிவு இயக்குநராகவும் இருந்தார். ஒரு வாரத்திற்கு முன்பு லண்டனிலிருந்து திரும்பிய இவருக்கு கொரோனா அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை.
SAMRC தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கிளெண்டா கிரே வெளியிட்டுள்ள அறிக்கையில் கீதா ராம்ஜி மரணமடைந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று சம்பந்தப்பட்ட சிகிச்சையின் போது கீதா ராம்ஜி மரணமடைந்திருப்பதாகவும் அறிக்கையில் கிளெண்டா கிரே குறிப்பிட்டிருக்கிறார்.
எச்.ஐ.வி தடுப்பு முறைகளைக் கண்டுபிடிப்பதற்காகத் தனது வாழ்நாளை அர்ப்பணித்ததற்காக கீதா ராம்ஜிக்கு 2018-ம் ஆண்டு போர்சுகல் லிஸ்பனில் சிறந்த பெண் விஞ்ஞானிக்கான விருதினை ஐரோப்பிய மேம்பாட்டு மருத்துவ பரிசோதனைகள் கூட்டாண்மை (ஈ.டி.சி.டி.பி) வழங்கியிருந்தது.
பேராசிரியர் கீதா ராம்ஜி எச்.ஐ.வி / எய்ட்ஸ் தொற்றுநோயைத் தடுப்பதற்கான உலகளாவிய பங்களிப்பை மேற்கொண்டதாக கிளெண்டா கிரே குறிப்பிட்டிருக்கிறார்.
கீதா ராம்ஜி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தென்னாப்பிரிக்காவின் மருந்தாளர் பிரவீன் ராம்ஜியை மணந்தார். தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதி சிரில் ரமபோசா நாடு முழுவதும் 21 நாட்கள் முடக்க நடவடிக்கையினை மேற்கொண்டிருப்பதாலும், இறுதி சடங்கு ஊர்வலத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாட்டின் காரணமாகவும் கீதா ராம்ஜியின் இறுதி சடங்கு குறித்து இன்னும் எந்த தகவலும் அறிவிக்கப்படவில்லை.
தென்னாப்பிரிக்காவில் முழு முடக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்டதிலிருந்து தற்போது வரை 5 பேர் இறந்திருக்கின்றனர். மேலும், 1350க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மக்களை வீடு வீடாகச் சென்று சோதனை மேற்கொள்ள 10 ஆயிரம் குழுக்களை இரு மடக்காக உயர்த்த அரசு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன. முன்னதாக முழு முடக்க நடவடிக்கையை தீவிரமாக எடுத்துக் கொள்ளாத ஆயிரக்கணக்கான தென்னாப்பிரிக்கர்களை அந்நாட்டின் ஜனாதிபதியான ரமபோசா எச்சரித்திருந்தார்.