கடந்த மாதம் 24-ம்தேதி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹைலைட்ஸ்
- 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இன்றுடன் 14 நாட்கள் ஆகின்றன
- கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் ஊரடங்கை நீட்டிக்க மாநிலஅரசுகள் வலியுறுத்தல்
- மத்திய அரசு பரிசீலிக்கிறது.ஊரடங்கு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்
New Delhi: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளன. இந்த கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
தெலங்கானா, அசாம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. கடந்த மாதம் 24-ம்தேதி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிக்கப்படாவிட்டால் ஏப்ரல் 15-ம்தேதி முதற்கொண்டு கட்டுப்பாடுகள் நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது.
நேற்று அமைச்சரவை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மக்கள் சற்று நீண்ட நாள் ஊரடங்குக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். அமைச்சர்களிடத்தில், ஊரடங்கை படிப்படியாக தளர்த்தும் திட்டத்தை தயாரித்து வாருங்கள் என்று மோடி வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ்,'எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால், ஊரடங்கை இன்னும் சில நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும். முதலில் மக்களைத்தான் காப்பாற்ற வேண்டும். பொருளாதாரத்தை நாம் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்' என்று கூறியுள்ளார்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், 'ஊரடங்கை உடடினயாக நம்மால் திரும்பப் பெற முடியாது. படிப்படியாகத்தான் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்' என்று கூறியுள்ளார்.
இதேபோன்று பாஜகு ஆளும் அசாம் மாநிலமும் படிப்படியான, அறிவியல் முறைப்படி ஊரடங்கை தளர்த்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. 'கொரோனா முழுவதும் நீங்கினால்தான் ஊரடங்கை திரும்பப் பெற வேண்டும். ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தாலும் கூட, நிலைமை விபரீதமாகிவிடும்' என்று உத்தரப்பிரதேச அரசு கூறியுள்ளது.
இவ்வாறு மாநிலங்களின் வலியுறுத்தல்களை மத்திய அரசு கவனத்தில் கொண்டு, ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது. இதுதொடர்பாக முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.