This Article is From Jun 10, 2020

நாடு முழுவதும் ஒரே நாளில் 9,985 பேருக்கு கொரோனா! மொத்த எண்ணிக்கை 2.76 லட்சத்தைக் கடந்தது!!

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 9,985 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல 279 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் ஒரே நாளில் 9,985 பேருக்கு கொரோனா! மொத்த எண்ணிக்கை 2.76 லட்சத்தைக் கடந்தது!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது இன்று 2,76,583 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,35,206 பேர் தொற்றிலிருந்து குணமடைந்திருக்கையில், 1,33,632 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 7,745 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 9,985 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல 279 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் முதல் முறையாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையை காட்டிலும் குணமடைந்தோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. 

தொற்று பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. ஆனால், இங்கு தொற்று சமூக பரவலாக மாறவில்லை என அம்மாநில  சுகாதார துறை அமைச்சர்  ராஜேஷ் டோப் நேற்று தெரிவித்திருந்தார். தற்போது சீனாவின் ஒட்டு மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையைவிட மகாராஷ்டிரா மாநிலம் அதிக எண்ணிக்கையை கொண்டுள்ளது. சீனாவில் ஒட்டு மொத்த கொரோனா எண்ணிக்கை 84,198 ஆகும். ஆனால், மகாராஷ்டிரா மாநிலத்தின் கொரோனா எண்ணிக்கை 90,787 என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையானது சீனாவின் வூகான் நகரைக் காட்டிலும் அதிக தொற்று பாதிக்கப்பட்ட நகரமாக மாறியுள்ளது. தற்போது மும்பையில் 51 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டின் தலைநகரான டெல்லியானது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் டெல்லியில் ஜூலை இறுதிக்குள் 5 லட்சம் கொரோனா நோயாளிகள் கண்டறியப்படுவார்கள் என டெல்லி துனை முதல்வர் மனிஷ் சிசோடியா நேற்று தெரிவித்திருந்தார். எனவே ஏறத்தாழ 80 ஆயிரம் படுக்கைகள் தேவைப்படுவதால் டெல்லி அரசு 22 தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகளை இரு மடங்காக உயர்த்த முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 7,745 உள்ள நிலையில் தமிழகத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கொரோனா தொற்று காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றுக்கு சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் உயிரிழந்தது இதுவே முதல் முறையாகும். தமிழகம் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள மாநிலத்தினை பொறுத்த அளவில் தற்போது கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கையானது 2 லட்சத்தினை கடந்துள்ளது. இவர்களில் பெரும்பாலோனோர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். தற்போது 1,900க்கும் அதிகமானோர் மருத்துவமனையிலிருந்து குணமடைந்துள்ளனர். தென்னிந்தியாவில் கேரளா சிறப்பாக நோய்த் தொற்றை கையாண்டுள்ளதாக பாராட்டினை பெற்றுள்ளது.

வழிபாட்டுத்தலங்கள், உணவகங்கள், வணிக வளாகங்கள் போன்றவற்றை திறக்க மத்திய அரசு 8-ம் தேதி முதல் அனுமதியளித்திருந்தது. இந்நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து கொரோனா தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

உலக அளவில் இதுவரை 70 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 4 லட்சத்தினை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது.

.