This Article is From Mar 19, 2020

கொரோனா தடுப்பு நடவடிக்கை! தமிழக அரசை பாராட்டிய ரஜினிகாந்த்!!

தமிழகத்தில் இருவருக்கு கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது 3வது நபருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

கொரோனா தடுப்பு நடவடிக்கை! தமிழக அரசை பாராட்டிய ரஜினிகாந்த்!!

தமிழகத்தில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • தமிழக அரசை பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ரஜினிகாந்த்
  • தமிழகத்தில் 3 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
  • பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கூடக்கூடாது என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக அரசின் செயல்பாடுகளை ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிக எண்ணிக்கையில் கூட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழக அரசின் நடவடிக்கை குறித்து ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது-

தமிழகத்தில் கொரோன வைரஸ் பரவாமல் தடுக்க அரசு எடுத்துக்கொண்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் பாராட்டத்தக்கவை. அரசோடு சேர்ந்து மக்கள் நாமும் இணைந்து இந்த கொடிய வைரஸ் பரவாமல் தடுக்க ஒத்துழைப்போம்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவித்தொகை அளித்தால், அவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள். 

இவ்வாறு ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

இதற்கிடையே, தமிழகத்தில் இருவருக்கு கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது 3வது நபருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இது குறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர், “அயர்லாந்தின் டப்ளினில் இருந்து மார்ச் 17 ஆம் தேதி சென்னைக்கு வந்த 21 வயது மாணவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சென்னை வந்தபோதே, கொரோனா குறித்த சோதனை செய்யப்பட்டு, வீட்டில் தனிமையில் வைக்கப்பட்டார். 

நேற்று ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிடம், தனக்கு கொரோனா குறித்த அறிகுறிகள் இருப்பதாகத் தெரிவித்தார். நேற்று அவரின் ரத்த மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்டது. அதன் முடிவு இன்று வந்தது. அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. தற்போது பாதிக்கப்பட்ட அந்த மாணவர் நலமோடு இருக்கிறார். அவர், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளார்,” என்று ட்விட்டர் மூலம் கூறியுள்ளார்.

.