அதிருப்தி எம்எல்ஏக்கள் சிலர் தங்களது மனநிலையை மாற்றிக்கொண்டு மீண்டும் வருவார்கள் என்று காங்.,-ஜேடிஎஸ் எதிர்பார்க்கிறது.
New Delhi: கர்நாடகாவில், ஆளும் கட்சியை சேர்ந்த 13 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் அளித்துள்ள நிலையில், ஆட்சியை காப்பாற்றும் கடைசி முயற்சியில் கூட்டணி கட்சி தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானப்படுத்த, தற்போதைய மாநில அமைச்சர்களை ராஜினாமா செய்ய தயாராகுமாறு வலியுறுத்தப்படுவதாக தெரிகிறது.
காங்கிரஸ் அமைச்சர்களை இன்று காலை உணவுக்கு அழைத்த துணை முதல்வர் பரமேஷ்வரா, இதனை அவர்களிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதனிடையே, நேற்று மாலை அமெரிக்கா பயணத்தில் இருந்து அவசரமாக கர்நாடகா திரும்பிய முதல்வர் குமாரசாமி நேராக மூத்த தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து, ஜேடிஎஸ் கட்சியினர் தங்கள் எம்எல்ஏக்களை சொகுசு விடுதியில் தங்க வைக்க முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், கர்நாடகா அமைச்சரும், சுயேட்சை எம்எல்ஏவுமான நாகேஷ் இன்று ராஜினாமா கடிதம் வழங்கியுள்ளார். மேலும், அதில் 'குமாரசாமி ஆட்சிக்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுவதாக' தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமையன்று 11 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் அளித்தபோது, சபாநாயகர் ரமேஷ் குமார் அலுவலகத்தில் இல்லை என்று தெரிகிறது. இதனால், ராஜினாமா கடிதம் குறித்து நாளை அவர் முடிவு செய்வார் என்று தெரிகிறது. சபாநாயகரால் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டால், காங்கிரஸ் - ஜனதா தளம் கூட்டணி தங்களது பெரும்பான்மையை இழக்க நேரிடும்.
கடந்த சனிக்கிழமையன்று ராஜினாமா செய்த எம்எல்ஏக்களில், காங்கிரஸை சேர்ந்தவர்கள் 8 பேரும், ஜேடிஎஸை சேர்ந்தவர்கள் 3 பேரும் ஆவர்கள். அன்றைய தினமே அவர்கள் அனைவரும் மும்பையில் உள்ள நட்சத்திர விடுதியில் முகாமிட்டுள்ளனர்.
இதனிடையே, அதிருப்தி எம்எல்ஏக்களில் ஒரு சிலர் தங்களது மனநிலையை மாற்றிக்கொண்டு மீண்டும் வருவார்கள் என்று காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணி எதிர்பார்க்கிறது.
தொடர்ந்து, மதசார்பற்ற ஜனதா தள தலைவரும், முன்னாள் பிரதமருமான ஹெச்.டி.தேவேகவுடா, துணை முதல்வர் பரமேஸ்வரா, முக்கிய அமைச்சர்கள் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் முயற்சி குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறும்போது, "கூட்டணி அரசாங்கத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை" என்று தெரிவித்துள்ளார். இதேபோல், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கூறும்போது, கூட்டணியை பிரிக்கும் நோக்கில் ஊடகத்தில் தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன.
இந்த கூட்டணி ஆட்சி அமைதியான முறையில் தொடர வேண்டும், ராஜினாமாவை திரும்ப பெற எம்எல்ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல், சித்தராமையா முதல்வராக பதவிவகிக்கவும் ஜேடிஎஸ் கூட்டணி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.