This Article is From Jul 22, 2019

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான் - 2

உலக நாடுகளிலேயே முதன்முறையாக நிலவின் தென்துருவ பகுதியை ஆராய, சந்திரயான்-2 விண்கலத்தை ஏவ இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ திட்டமிட்டு இருந்தது. இதன்மூலம் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளின் வரிசையில், நான்காவது நாடாக இந்தியாவும் இடம்பெற இருந்தது.

முன்னதாக தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்ணில் செலுத்துவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

New Delhi:

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சந்திரயான் 2 விண்கலம், இன்று பிற்பகல் 2.43 அளவில் விண்ணில் ஏவப்பட்டது. புவியை நீள் வட்டப் பாதையில் சுற்றி வரும் சந்திரயான் 2 விண்கலம், நிலவில் சரியான இடத்தை தேர்வு செய்து அங்கு தரையிறங்கும்.

உலக நாடுகளிலேயே முதன்முறையாக நிலவின் தென்துருவ பகுதியை ஆராய, சந்திரயான்-2 விண்கலத்தை ஏவ இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ திட்டமிட்டு இருந்தது. இதன்மூலம் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளின் வரிசையில், நான்காவது நாடாக இந்தியாவும் இடம்பெற இருந்தது. 

அதன்படி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து கடந்த திங்கள் கிழமை சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது.

ஒருநாளுக்கு முன்னதாகவே கவுன்டவுன் தொடங்கப்பட்ட நிலையில் சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதற்கு 56 நிமிடங்கள் 24 விநாடிகள் மட்டுமே இருந்த நிலையில், கவுன்டவுன் திடீரென நிறுத்தப்பட்டது. மார்க் 3 ராக்கெட்டில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறு கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது
 


இதுதொடர்பாக, இஸ்ரோவை சேர்ந்த மூத்த விஞ்ஞானி ஒருவர் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில், இந்த பிரச்சினை முன்னதாகவே கண்டறியப்பட்டு சரிசெய்யப்படாமல் விட்டிருந்தால், சந்திரயான்-2  விண்கலம் தோல்வி அடைந்திருக்கும் என்று அவர் கூறியிருந்தார்.

மேலும், இந்த கோளாறு தீவிரமானதுதான், ஆனால் அதனை சரிசெய்வது எளிதானது. அதிர்ஷ்டவசமாக, நாங்கள் இந்த கோளாறை கண்டுபிடித்தோம். விழிப்புணர்வு, பிரார்த்தனை மற்றும் இந்தியர்களின் நல்வாழ்த்துக்கள் இந்த பயணத்தின் மொத்த தோல்வியையும் தவிர்க்க உதவியது என்று அவர் கூறினார். 

இதையடுத்து கோளாறு முழுமையாகச் சரி செய்யப்பட்டு 22 ஆம் தேதி மதியம் 2.43 மணிக்கு சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்தது.

அதன்படி, இன்று பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இதற்கான 20 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று மாலை 6.43 மணிக்கு தொடங்கியது.

சந்திரயான்-2 ஏவுவது காலதாமதமானதால், அதன் பயணத்தில் சில மாற்றங்களை இஸ்ரோ செய்துள்ளது. முன்னதாக பூமியை 17 நாட்களுக்கு சுற்றுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அது 23 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

.