This Article is From Aug 06, 2018

கோயில் நிர்வாகத்தில் குளறுபடி: சிங்கப்பூர் வீரமாகாளியம்மன் கோயில் தலைவர் அதிரடி நீக்கம்

விசாரணையில் குறுக்குக்கோடு இடப்படாத காசோலைகள் அளித்து வந்தது கண்டுபிடிப்பு.

கோயில் நிர்வாகத்தில் குளறுபடி: சிங்கப்பூர் வீரமாகாளியம்மன் கோயில் தலைவர் அதிரடி நீக்கம்

வீரமாகாளியம்மன் கோயில் சிங்கப்பூரின் பழமையான இந்துக் கோவில்களுள் ஒன்றாகும்.

Singapore:

சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் அமைந்த நூறாண்டுப் பழமை வாய்ந்த வீரமாகாளியம்மன் கோயில் நிர்வாகத்தின் தலைவர் சிவகடாட்சம், அப்பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். பதினொரு மாதங்கள் நடந்த விசாரணையின் முடிவாக, பெரும் நிர்வாகக் குளறுபடிகளைக் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, சிங்கப்பூரின் அறக்குழுக்களைக் கண்காணிக்கும் அமைப்பு இம்முடிவை எடுத்துள்ளது. மேலும் சிவகடாட்சம் வேறு எந்தக் கோயில், அறக்குழுக்களிலும் அறங்காவலராகவோ, முக்கிய உறுப்பினராகவோ, இயக்குநராகவோ இருக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அறக்குழு ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் வணிக விவகாரங்கள் துறை நடத்திய விசாரணையில், கோயிலின் முக்கிய நிர்வாகிகள் குறுக்குக்கோடுகள் இடப்படாத காசோலைகளை (uncrossed cheques) அளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்ததோடு அவற்றை கோயிலில் பணமாக மாற்றிக்கொள்ளவும் அனுமதித்துள்ளனர்.

ஜனவரி 2011 முதல் ஜூலை 2014 வரை மட்டும் குறைந்தது 823 குறுக்குக்கோடுகள் இடப்படாத காசோலைகள் அளிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு 15 இலட்சம் சிங்கப்பூர் டாலர்கள் ஆகும். இவற்றுள் 2,27,000 SGD மதிப்புள்ள 45 காசோலைகள் தவறான நபர்களிடம் வழங்கப்பட்டுள்ளன.

இதனிடையே இக்கோயிலில் நடைபெற்ற கிரிமினல் குற்றங்கள் பற்றியும் விசாரணை நடந்து வருகிறது. “அறக்குழுக்களில் தவறான நடத்தையோடு செயல்பட்டால் அது அவற்றின் மீதான நம்பிக்கையை பொதுமக்களிடம் வெகுவாகக் குலைத்துவிடும். எனவே இத்தகைய தவறான நிர்வாகத்தினை பொறுத்துக்கொள்ளவே முடியாது” என்று அறக்குழு ஆணையாளர் செங் தெரிவித்தார். இவர் கடந்த ஏப்ரல் மாதமே சிவகடாட்சத்தைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கோயிலின் அன்றாட நடவடிக்கைகள், பூசைகள் வழக்கம்போலவே நடைபெறும் எனவும் திரு. செங் தெரிவித்தார்.

1881 இல் கட்டப்பட்ட வீரமாகாளியம்மன் கோயில் சிங்கப்பூரின் பழமையான இந்துக் கோவில்களுள் ஒன்றாகும்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.