This Article is From Apr 04, 2020

கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர 1 மாதம் ஊரடங்கு: சிங்கப்பூர் பிரதமர் அறிவிப்பு!

இதுபோன்ற சவாலான காலங்களை, அமைதியுடனும், ஒற்றுமையுடனும் எதிர்கொள்வோம் என்று சிங்கப்பூர் பிரதமர் தெரிவித்துள்ளார். 

கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர 1 மாதம் ஊரடங்கு: சிங்கப்பூர் பிரதமர் அறிவிப்பு!

கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர 1 மாதம் ஊரடங்கு: சிங்கப்பூர் பிரதமர் அறிவிப்பு!

ஹைலைட்ஸ்

  • கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர 1 மாதம் ஊரடங்கு
  • அடுத்த செவ்வாய்கிழமை முதல் ஒரு மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்படும்
  • சிங்கப்பூரில் சுமார் 1000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் சிங்கப்பூரில் வரும் செவ்வாய்க்கிழமை (7ஆம் தேதி) முதல் ஒரு மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அந்நாட்டு பிரதமர் லீ சியன் லூங் அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தனது முகநூல் பதிவில் கூறியதாவது, கொரோனா நெருக்கடியை நாங்கள் பொறுமையாக திட்டமிட்டு எதிர்கொண்டு வருகிறோம். சூழ்நிலைகள் மாறுவதற்கு ஏற்ப எங்கள் நடவடிக்கைகளையும் நாங்கள் மாற்றி வருகிறோம். 

அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொருளாதார துறைகளைத் தவிர்த்து, அனைத்து அலுவலக பணியிடங்களையும் நாங்கள் மூடுகிறோம். உணவகங்கள், சூப்பர் மார்கெட்டுகள், மருத்துவமனைகள், போக்குவரத்து மற்றும் வங்கி சேவைகள் மட்டுமே இனி செயல்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

மேலும், வரும் நாட்களில் கொரோனாவால் ஏற்படும் சூழ்நிலைகளை சமாளிக்க தயாராக உள்ளதாகவும், நாடு தற்போது கட்டுப்பாட்டிற்குள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

உங்கள் தேவைகளுக்கு ஏற்ப உணவு பொருட்களை வாங்குங்கள். உங்கள் தேவைக்கு மேல் இருக்கும் பொருட்களை தேவைப்படுபவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நமது உணவு சங்கிலியில் எந்த தடையும் ஏற்படாது என்பதை மீண்டும் உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற சவாலான காலங்களை, அமைதியுடனும், ஒற்றுமையுடனும் எதிர்கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளார். 

தற்போது வரை சிங்கப்பூரில் சுமார் 1000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 5 பேர் உயிரிழந்துள்ளனர். 

உலகளவில் கொரோனா தொற்றுக்கு 10லட்சம் பேர் வரை பாதிப்படைந்துள்ளனர். மேலும், உயிரிழப்பு எண்ணிக்கை 50,000 மேல் அதிகரித்துள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

.