This Article is From Aug 02, 2018

பிரியாணிக் கடையில் பாக்சிங் குத்து: திமுகவினர் கட்சியிலிருந்து நீக்கம்

கடை மூடும் நேரத்தில் வந்து பிரியாணி கேட்டு தகராறு செய்ததாக உணவக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்

உணவக ஊழியர் முகத்தில் சரமாரியாகக் குத்துவிடும் திமுகவினர்

ஹைலைட்ஸ்

  • உணவக ஊழியர்களை போதையில் இருந்த இரு திமுகவினர் அடித்ததாகக் கூறப்படுகிறது
  • பிரியாணி கேட்டு கிடைக்காததால் ஆத்திரமடைந்து பணியாளர்களைத் தாக்கியுள்ளனர்
  • விருகம்பாக்கத்தில் உள்ள உணவகத்தில் ஞாயிறு இரவு இந்நிகழ்வு நடந்துள்ளது
Chennai:

கடை மூடும் நேரத்தில் வந்து பிரியாணி கேட்ட திமுகவினர் இருவரிடம் உணவு தீர்ந்துவிட்டதாக ஊழியர்கள் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ஊழியரை ‘பாக்சிங்’ பாணியில் சரமாரியாகத் தாக்கும் சிசிடிவி வீடியோ காட்சிகள் வேகமாகப் பரவி வருகின்றன.

கடந்த ஞாயிறு இரவு சென்னை விருகம்பாக்கத்திலுள்ள உணவகத்தில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. இது காவேரி மருத்துவமனையில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் காவேரி மருத்துவமமையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அங்கு பல நூறு திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். கலைந்து செல்லுமாறு திமுக தலைவர்கள் கூறிய பின்னரும், காவல்துறை தடியடி நடத்தியும் அவர்கள் தொடர்ந்து அங்கேயே இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவத்தில் ஈடுபட்டவர் யுவராஜ் என்றும் அவர் மீதும் அவரது கூட்டாளிகள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

இந்நிலையில், உணவகத்தில் ஊழியர்களைத் தாக்கிய யுவராஜ், திவாகர் ஆகிய இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து திமுக இடைக்கால நீக்கம் செய்துள்ளது என்று பொதுச்செயலாளர் க. அன்பழகன் அவர்கள் அறிவித்துள்ளார்.

“விருகம்பாக்கத்தில் உள்ள கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கழகக் கட்டுப்பாட்டை மீறியவர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள். கழக நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறேன்” என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உரிய விசாரணைக்குப் பிறகு இருவரும் நிரந்தரமாக கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. “ஊழியரைத் தாக்கிய இருவரும் இந்து முன்னணியில் இருந்து அண்மையில்தான் திமுகவில் இணைந்தனர். அவர்கள் எப்பொறுப்பிலும் இல்லை. இதுபோன்று செயல்களில் யார் ஈடுபட்டாலும் ஏற்கமுடியாது” என்று திமுகவைச் சேர்ந்த முன்னாள் மேயர் திரு. மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

.