This Article is From Mar 01, 2020

''CAA சட்டம் அல்ல; மக்களை தனிமைப்படுத்துவதற்கான திட்டம்'' - இயக்குநர் வெற்றி மாறன் பேட்டி!!

ஆவணங்களைக் காட்டுவதும், காட்டாமல் இருப்பதும் நம்முடைய விருப்பம்தான். அதனால் அதனைக் கட்டாயம் காட்ட வேண்டும் என்கிற எந்த அவசியமும் இப்போது இல்லை. எனவே, ஒருவேளை அதிகாரிகள் வந்து கேட்டால்கூட நாம் அதனைக் காட்ட வேண்டியது இல்லை என்று கூறியுள்ளார் வெற்றி மாறன்.

''CAA சட்டம் அல்ல; மக்களை தனிமைப்படுத்துவதற்கான திட்டம்'' - இயக்குநர் வெற்றி மாறன் பேட்டி!!

ஒட்டுமொத்தமாக மக்கள் மனதில் இந்த சட்டம் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று வெற்றி மாறன் கூறியுள்ளார்.

ஹைலைட்ஸ்

  • ''என்.பி.ஆர். என்பது என்.சி.ஆரின் இன்னொரு முகம்தான்''
  • ''ஆவணங்களை காட்டுவதும், காட்டாமல் இருப்பதும் நம்முடைய விருப்பம்தான்.'''
  • ''D குறியீட்டை நமக்கெதிராக எந்த காலத்திலும் பயன்படுத்த வாய்ப்புள்ளது''

குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது சட்டம் அல்ல; அது மக்களைத் தனிமைப்படுத்தும் திட்டம் என்று இயக்குநர் வெற்றிமாறன் பரபரப்பான பேட்டி அளித்துள்ளார். 

குடியுரிமை சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. டெல்லியில் குடியுரிமை சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களிடையே நடந்த மோதலில்  42 பேர் உயிரிழந்துள்ளனர்.  

இந்த நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-

என்.பி.ஆர். என்பது என்.சி.ஆரின் இன்னொரு முகம்தான். முதலில் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கும்போது அதிகாரிகள் வருவார்கள். ஆவணங்கள் கேட்பார்கள். நாம் அளிப்போம். அப்போது அவர்களுக்கு யார் மீதேனும் சந்தேகம் இருந்தால் ஞி என்று குறிப்பிட்டுக் கொள்வார்கள். இந்த ஞி குறியீட்டை நமக்கெதிராக எந்த காலத்திலும் எப்போதும் பயன்படுத்த வாய்ப்புள்ளது. 

ஆவணங்களைக் காட்டுவதும், காட்டாமல் இருப்பதும் நம்முடைய விருப்பம்தான். அதனால் அதனைக் கட்டாயம் காட்ட வேண்டும் என்கிற எந்த அவசியமும் இப்போது இல்லை. எனவே, ஒருவேளை அதிகாரிகள் வந்து கேட்டால்கூட நாம் அதனைக் காட்ட வேண்டியது இல்லை. 

ஆவணங்களைக் காட்டாமல் இருப்பதன் மூலமாகவே நாம் ஒற்றுமையாக இருக்கலாம் என நினைக்கிறேன். 

குடியுரிமை சட்டத்திருத்தம் என்பதும் சட்டம் அல்ல. அது மக்களைத் தனிமைப்படுத்துவதற்கான திட்டமாகத்தான் உள்ளது. 

ஒட்டுமொத்தமாக மக்கள் மனதில் இந்த சட்டம் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதான் பாசிச அமைப்புடைய அடிப்படை என்று நினைக்கிறேன். 
இவ்வாறு அவர் தெரிவித்தார். 

.