This Article is From Mar 13, 2020

தமிழகத்தில் என்.பி.ஆர். பணிகள் திடீர் நிறுத்தம்!! வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் அறிவிப்பு

தமிழகத்தில் என்.பி.ஆர்., என்.ஆர்.சி. உள்ளிட்டவற்றை கொண்டு வரக்கூடாது என்று கோரியும், இதற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் இஸ்லாமிய அமைப்புகள் கடந்த சில வாரங்களாகத் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தமிழகத்தில் என்.பி.ஆர். பணிகள் திடீர் நிறுத்தம்!! வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் அறிவிப்பு

தமிழகத்தில் என்.பி.ஆர். பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், என்.பி.ஆரில் சேர்க்கப்பட்டுள்ள 3 அம்சங்கள் குறித்து மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியிருந்ததாகவும், இதற்குப் பதில் கடிதம் கிடைக்காததால் என்.பி.ஆரை நிறுத்தி வைப்பதாகவும் விளக்கம் அளித்தார். 

முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து, எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி அரை மணிநேரத்திற்கும் மேலாகப் பேசினார். இந்த சூழலில் வருவாய்த்துறை அமைச்சரிடமிருந்து இத்தகைய அறிவிப்பு வந்துள்ளது.

தமிழகத்தில் என்.பி.ஆர்., என்.ஆர்.சி. உள்ளிட்டவற்றை கொண்டு வரக்கூடாது என்று கோரியும், இதற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் இஸ்லாமிய அமைப்புகள் கடந்த சில வாரங்களாகத் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் என்.பி.ஆர். குறித்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

என்.பி.ஆரில் புதிதாகச் சேர்க்கப்பட்ட அம்சங்கள் குறித்து விளக்கம் அளிக்கக்கோரி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தோம். இதற்கான பதில் கிடைக்கவில்லை. தமிழகத்தில் என்.பி.ஆர். பணிகள் நிறுத்தி வைக்கப்படுகிறது. 

இதனை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது திமுகதான் தமிழ்நாட்டில் கொண்டு வந்தது. இஸ்லாமியச் சகோதர சகோதரிகளின் அரணாக அதிமுக எப்போதும் விளங்கும். என்.பி.ஆர். விவகாரத்தில் அவர்களின் சந்தேகங்களை நீக்கும் வகையில் அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. 

என்.பி.ஆர். கணக்கெடுப்பின்போது எந்த ஆவணத்தையும் மக்கள் காட்டத் தேவையில்லை. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கூறும் பொய்களை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம்.

என்.ஆர்.சி. விவகாரத்தில் இஸ்லாமியர்களைத் தூண்டி விட்டு போராட்டம் நடத்தக்கூறுவது திமுகதான். இதுபற்றிய உண்மை ஒருநாள் வெளிவரும். அப்போது எல்லோருக்கும் புரியும். 

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார். 

.