காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசை விமர்சித்த பிரிட்டன் எம்.பி. துபாய்க்கு திரும்பினார்!!

அரசுத் தரப்பில் முறையான ஆவணங்களை ஆப்ரஹாம்ஸ் வைத்திருக்கவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எதற்காக அவருக்கு விசா மறுக்கப்பட்டது என்பது குறித்து, இந்திய அதிகாரிகளிடம் கூடுதல் விளக்கம் கேட்டு வருவதாகப் பிரிட்டன் தூதரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா வருவதற்கான விசா மறுக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் எம்.பி. டெப்பி ஆப்ரஹாம்ஸ் கூறியுள்ளார்.

New Delhi:

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது தொடர்பாக மத்திய அரசை விமர்சித்த பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் டெப்பி ஆப்ரஹாம்ஸ், டெல்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரது விசா ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் துபாய்க்குத் திரும்பியுள்ளார். 

டெல்லி விமான நிலையத்தில் அவர் இருந்தபோது, அவருக்கான விசா நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். ஜம்மு காஷ்மீரைப் பார்வையிடும் பிரிட்டன் எம்.பி.க்கள் குழுவின் தலைவரான அவர், தான் ஒரு குற்றவாளியைப் போல நடத்தப்பட்டதாக விமர்சித்துள்ளார். 

ஆனால் அரசுத் தரப்பில் முறையான ஆவணங்களை ஆப்ரஹாம்ஸ் வைத்திருக்கவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எதற்காக அவருக்கு விசா மறுக்கப்பட்டது என்பது குறித்து, இந்திய அதிகாரிகளிடம் கூடுதல் விளக்கம் கேட்டு வருவதாகப் பிரிட்டன் தூதரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து எம்.பி. டெப்பி ஆப்ரஹாம்ஸ் கூறுகையில், 'இன்றுகாலை சுமார் 8.50-க்கு டெல்லி விமான நிலையத்திற்கு வந்திறங்கினேன். என்னுடைய விசா கடந்த அக்டோபர் வழங்கப்பட்டது. அது 2020 செப்டம்பர் வரையில் செல்லுபடியாகும். ஆனால் எனது விசா நிராகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர். 

சோதனை அதிகாரிகளிடம் எனது ஆவணங்கள், புகைப்படம் உள்ளிட்டவற்றை அளித்தேன். என்னிடம் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் வாங்கிக்கொண்டு 10 நிமிடங்கள் கழித்துத் திரும்பி வந்தனர். அதன்பின்னர் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டனர். என்னைப் பார்த்தும் சத்தமாக 'என்னுடன் வாருங்கள்' என்று கத்தினர்.

நான் அவர்களிடம் இதுபோன்று கடினமான முறையில் பேசாதீர்கள் எனக் கேட்டுக்கொண்டேன். அவர்கள் என்னை உட்காருமாறு கட்டளையிட்டார்கள். நான் அதற்கு மறுத்தேன். அவர்கள் எதற்காக என்னிடம் இப்படி நடந்து கொண்டார்கள் என்பது தெரியவில்லை. எனக்கு நடந்தவற்றை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.

என்னிடம் சோதனை செய்த அதிகாரிகளுக்கு உயர் அதிகாரி போல் ஒருவர் இருந்தார். அவருக்கு எனக்கு என்ன நடந்தது என்பது தெரிந்திருக்கவில்லை. தெரிந்த பின்னர் அவர் என்னிடம் வருத்தம் தெரிவித்தார். நான் ஒரு குற்றவாளிபோல் இங்கு நடத்தப்பட்டுள்ளேன். அவர்கள் எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களையாவது இந்தியாவுக்கு வர அனுமதிக்கட்டும்.' என்று கூறியுள்ளார். 

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது தொடர்பாக எம்.பி. ஆப்ரஹாம்ஸ் மத்திய அரசை விமர்சித்திருந்தார். அவரது டிவிட்டர் டைம்லைனில், ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் தொடர்பாகப் பல பதிவுகளைக் காண முடிகிறது.