This Article is From Nov 01, 2019

நவ.7-க்குள் ஆட்சியமைக்காவிட்டால் மகாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர் ஆட்சி! - பாஜக தலைவர்

பாஜக மற்றும் சிவசேனா இடையே ஆட்சி அமைப்பது தொடர்பாக இழுபறி நீடித்தால் குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு வழிவகுக்கும் என பாஜகவின் மூத்த தலைவரும் நிதியமைசருமான சுதிர் முங்கன்திவார் தெரிவித்துள்ளார்.

நவ.7-க்குள் ஆட்சியமைக்காவிட்டால் மகாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர் ஆட்சி! - பாஜக தலைவர்

அமைச்சரவையில் சரிபாதி இடங்கள் என்ற திட்டத்தில் சிவசேனா உறுதியா உள்ளது.

Mumbai:

மகாராஷ்டிராவில் நவ.7-க்குள் ஆட்சியமைக்காவிட்டால் குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு வழிவகுக்கும் என பாஜகவின் மூத்த தலைவரும் நிதியமைச்சருமான சுதிர் முங்கன்திவார் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 21தேதி வெளியான நிலையில், 8 நாட்களை கடந்தும் இன்னும் மாநிலத்தில் ஆட்சி அமைக்காமல் இருக்கும் நிலையில் சுதிர் இவ்வாறு கூறியுள்ளார். தற்போது உள்ள சட்டமன்றத்தின் காலம் நவ.8ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. 

இதுதொடர்பாக தொலைக்காட்சிக்கு ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், தீபாவளி பண்டிகை காரணமாக பாஜக மற்றும் சிவசேனா இடையேயான பேச்சுவார்த்தை தாமதமானதாக கூறிய அவர், எங்கள் கூட்டணி ஃபெவிகால் அல்லது அம்புஜா சிமெண்ட்டை விட உறுதியானது என்றார். அதனால், விரைவில் ஆட்சி அமைப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று அவர் கூறினார். 

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில் பாரதிய ஜனதாவுக்கு சிவசேனாவின் ஆதரவு தேவைப்படுகிறது. இதனால் 50 சதவீத அதிகாரப்பகிர்வு, 2.5 வருடத்துக்கு சிவசேனா முதல்வர், அமைச்சரவையில் சரிபாதி இடங்கள் என்ற திட்டத்தில் சிவசேனா உறுதியாக உள்ளது. மேலும், “லோக்சபா தேர்தலுக்கு முன்னர் 50:50 அதிகாரப் பகிர்வுக்கு அமித்ஷா ஒப்புக் கொண்டதாக சிவசேனா கட்சி கூறிவருகிறது. 

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா, மகாராஷ்டிராவின் முதல்வராக இருந்த தேவேந்திர ஃபட்னாவிஸ்தான், முதல்வராக தொடர வேண்டும் என்று கருதுகிறார்கள். சிவசேனாவின் நிலைப்பாட்டுக்கு எதிர்க்கட்சியான தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் சரத் பவார், ‘சிவசேனாவின் நிபந்தனையில் எந்த தவறும் இல்லை,' என்றுள்ளார். 

மகாராஷ்டிர மாநில சட்டமன்றத் தொகுதி பங்கீடு தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியினருடன் மும்பையில் பேச்சுவார்த்தை நடத்திய பொழுது 50 சதவீத அதிகாரப் பங்கீடு திட்டத்தை சிவசேனை முன்வைத்தது உண்மைதான். ஆனால் அந்த திட்டத்தை பாரதீய ஜனதா கட்சி ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை என மகாராஷ்டிர மாநில முதல்வர் பட்னாவிஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.
 

.