This Article is From Feb 29, 2020

'ராஜ தர்மத்தைப் பற்றி சோனியா காந்தி பாடம் எடுக்கத் தேவையில்லை' - பாஜக

டெல்லியில் நடந்த வன்முறைகளுக்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சோனியா காந்தி கூறியிருந்தார்.

சோனியா காந்திக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிலடி கொடுத்துள்ளார்.

ஹைலைட்ஸ்

  • சோனியா காந்தியின் குற்றச்சாட்டுக்கு ரவி சங்கர் பதில் அளித்துள்ளார்
  • பாஜக மீதான விமர்சனங்களுக்கு ரவி சங்கர் விளக்கம் தெரிவித்துள்ளார்
  • பாஜகமீது புகார் தெரிவித்து குடியரசுதலைவரிடம் காங்கிரஸ் மனு அளித்திருந்தது
New Delhi:

ராஜ தர்மத்தைப் பற்றி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பாடம் நடத்தத் தேவையில்லை என்று பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ரவி சங்கர் பிரசாத் பதிலடி கொடுத்துள்ளார். 

இதேபோன்று சர்ச்சைக்குரிய பாஜக தலைவர் கபில் சர்மா பேசியதுதான் கலவரத்திற்கு அடிப்படை காரணம் என்ற குற்றச்சாட்டுக்கும் ரவி சங்கர் பிரசாத் விளக்கம் அளித்துள்ளார். டெல்லி  கலவரத்தில் தற்போது வரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். 

ரவி சங்கர் பிரசாத் அளித்த பேட்டியில்,'கபில் மிஷ்ரா பேசியதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. கட்சியின் மூத்த தலைவர்கள் பொது மேடையில் கபில் மிஷ்ராவை கண்டித்துள்ளனர். வன்முறை நடந்த முதல் நாள் முதற்கொண்டு அதனைக் கட்டுப்படுத்துவதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா தீவிரமாக செயல்பட்டு வருகிறார். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். 

டெல்லி வன்முறைக்கு மத்திய மாநில அரசுகளே காரணம் என்று குற்றம் சாட்டி சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து புகார் மனுவை நேற்று அளித்தனர்.

டெல்லி வன்முறையில் மத்திய மாநில அரசுகள் மவுனப் பார்வையாளராக மட்டுமே இருந்துள்ளனர் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. 

குடியரசுத் தலைவரைச் சந்தித்த பின்னர் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், 'குடியரசுத் தலைவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ராஜ தர்மத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்' என்றார்.  

சோனியா காந்தி அளித்த பேட்டியில்,'மத்திய அரசும், புதிதாக ஆட்சிக்கு வந்த டெல்லி ஆம் ஆத்மி அரசும், நடந்த கலவரத்தை வாய்மூடிப் பார்த்துக் கொண்டிருந்தனர்' என்று குற்றம் சாட்டினார். 

டெல்லி கலவர விவகாரத்தில் மத்திய பாஜக அரசையும், மாநில ஆம் ஆத்மி அரசையும் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. வன்முறை குறித்து விசாரணை நடத்தக் காங்கிரஸ் தரப்பில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 

.