This Article is From Feb 26, 2020

சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை: உயிரிழப்பு 13 ஆக அதிகரிப்பு!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பாஜக தலைவர் கபில் மிஸ்ரா தலைமையில் ஞாயிற்றுக்கிழமையன்று பேரணி செல்ல முயன்ற போது சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை: உயிரிழப்பு 13 ஆக அதிகரிப்பு!

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட கல்வீச்சு சம்பவத்தை தொடர்ந்து, பெரும் வன்முறை நிகழ்ந்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • டிரம்ப் இந்தியா வந்திருக்கும் சூழலில் டெல்லியில் வன்முறை வெடித்துள்ளது
  • அமித் ஷா, கெஜ்ரிவால் உள்ளிட்டோர் டெல்லி வன்முறை தொடர்பாக ஆலோசனை
  • மீண்டும் வன்முறை வெடித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

டெல்லியின் வடகிழக்கு பகுதியான ஜாஃப்ராபாத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்து வந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் ஒரு காவலர் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 

சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த வந்த போராட்டத்தில் நேற்றைய தினம் திடீரென பெரும் மோதல் ஏற்பட்டது. சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட இந்த மோதலை தொடர்ந்து, இருபிரிவினரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி, கற்களை வீசி தாக்கிக்கொண்டுள்ளனர். அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. ஒரு சில கடைகளுக்கும் தீ வைக்கப்பட்டது. இதனால், அந்த பகுதியே பெரும் போர்க்களமாக மாறியது. 

இதையடுத்து அங்கு போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி கலவரம் ஏற்படுத்தியவர்களைத் துரத்தி அடித்தனர். தொடர்ந்து, சம்பவ இடத்தில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். இதனால், அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் தரப்பில், நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நடந்த இந்த வன்முறைச் சம்பவத்தில் படுகாயமடைந்த தலைமைக் காவலர் ரத்தன் லால் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதேபோல், துணை ஆணையர் ஒருவரும் இதில் காயமடைந்துள்ளார். இதுதொடர்பாக வெளியான வீடியோக்களில், அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்படுகிறது. ஒரு சில கட்டிடங்களிலும் தீ வைக்கப்படுகிறது. 

மற்றொரு வீடியோவில், சிவப்பு நிற சட்டை அணிந்த ஒருவர் கையில் துப்பாக்கியுடன் காவலரை மிரட்டி விட்டு துப்பாக்கிச்சூட்டில் ஈடுபடுகிறார். இதில் ஒரு சில வீடியோக்களில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் ஜெய்ஸ்ரீராம் கோஷம் எழுப்புகின்றனர். சில வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. கோகுல்புரி பகுதியில், மெட்ரோ ரயில் நிலையம் அருகில் உள்ள மார்க்கெட்டிற்கும் தீ வைக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் துரிதமாகச் செயல்பட்டு தீயை அணைத்தனர். வன்முறை காரணமாக ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா பகுதிகள் போர்க்களமாக மாறின.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமையன்று, ஜாஃப்ராபாத் அருகேயுள்ள மவுஜ்பூரில் ஆயிரக்கணக்கான பெண்கள் சி.ஏ.ஏ மற்றும், என்.ஆர்.சி ஆகியவற்றிலிருந்து விடுதலை வேண்டும் என்கிற முழக்கங்களை முன் வைத்து அமைதியாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், திடீரென அங்குக் கலவரம் வெடித்தது.  அதன் தொடர்ச்சியாக நேற்றும் அதேபகுதியில் இந்த வன்முறைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

இந்த வன்முறைச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இது "மிகவும் வருத்தமளிக்கும் செய்தி" என்று தெரிவித்துள்ளார். மேலும், "சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்கவும், அமைதியும் நல்லிணக்கமும் பேணப்படுவதை உறுதிப்படுத்தவும்" டெல்லி காவல்துறையினர் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளனர் என்பதைத் தெரியப்படுத்தவும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து, வன்முறை காரணமாக டெல்லியில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

.