This Article is From Jun 11, 2020

ராஜஸ்தானில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முயலும் காங்கிரஸ்!

ராஜஸ்தான் சட்டமன்றத்தின் தலைமை கொறடா மகேஷ் ஜோஷி, மாநில ஊழல் தடுப்பு அமைப்பின் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பண சக்தியுடன் கவர்ந்திழுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மகேஷ் ஜோஷி கூறினார்

Jaipur:

 ராஜஸ்தான் மாநிலத்தில் ஜூன் 19 ம் தேதி மூன்று ராஜ்யசாபா உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அம்மாநில ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ் தனது எம்.எல்.ஏக்களை பாதுகாப்பதில் மும்முரமாக உள்ளது. பண பலத்தினை கொண்டு தங்களது எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயல்வதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் தனது எம்.எல்.ஏக்கள் அனைவரையும் டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் உள்ள சிவ் விலாஸ் என்ற ரிசார்ட்டுக்கு மாற்றியுள்ளது, அங்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ரன்தீப் சுர்ஜேவாலா மற்றும் கே.சி. வேணுகோபால் ஆகியோருடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. முன்னதாக மத்திய பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் அம்மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவி காங்கிரஸை ஆட்சியிலிருந்து அகற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

"ராஜஸ்தானில், மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் கர்நாடகாவைப் போலவே, எமது எம்எல்ஏக்களும் எங்களுக்கு ஆதரவளிக்கும் சுயேச்சைகளும் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை நிலையற்றதாக மாற்ற எதிர்கட்சிகளால் பேரம் பேசப்படுகிறார்கள். இது மக்களின் விருப்பத்திற்கு எதிரானதாக உள்ளது" என்று ராஜஸ்தான் சட்டமன்றத்தின் தலைமை கொறடா மகேஷ் ஜோஷி, மாநில ஊழல் தடுப்பு அமைப்பின் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "எங்கள் எம்.எல்.ஏக்கள் மற்றும் சுயேச்சைகள் எங்களுக்கு ஆதரவளிக்கின்றனர். அவர்களை பண பலத்தால் ஈர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன". என அந்த கடிதத்தில் பாஜக பெயர் குறிப்பிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில், "ஒரு எம்.எல்.ஏ.வுக்கு 25 முதல் 30 கோடி வரை செலவழிக்க பாஜக தயாராக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது“ என அசோக் குறிப்பிட்டிருந்தார்.

ராஜஸ்தானில் மூன்று மாநிலங்களவை இடத்திற்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இரண்டில் காங்கிரஸ் கட்சியும், ஒன்றில் பா.ஜனதாவும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பா.ஜனதா ஒருவருக்குப் பதிலாக இரண்டு பேரை களம் இறக்கியுள்ளது. ஒரு வேட்பாளர் வெற்றிபெற 51 எம்எல்ஏ-க்கள் ஆதரவு தேவை.

தற்போதைய சூழலில் காங்கிரசுக்கு பயமில்லையென்றாலும், காங்கிரசுக்கு அதரவளித்துக்கொண்டிருக்கும் 12 சுயேச்சை எம்.எல்.ஏக்களின் ஆரதவினை பாஜக பெற்றுவிட்டால் நிலைமை தலைகீழாக மாறிவிடும்.

காங்கிரசிடம் 107 எம்எல்ஏ-க்கள் உள்ளனர். இதில் ஆறு மாயாவதி கட்சியைச் சேர்ந்தவர்கள். கடந்த வருடம் இவர்கள் ஆதரவை விலக்கிக் கொண்டனர். 12 சுயேட்சை எம்எல்ஏ-க்கள் ஆரவு கொடுத்துள்ளனர். பா.ஜனதாவுக்கு 72 எம்எல்ஏ-க்கள் உள்ளனர். மேலும் கூட்டணி கட்சி, சுயேட்சை வேட்பாளர்கள் என 6 பேர் ஆதரவு கொடுத்துள்ளனர்.

அதே போல குஜராத்தை பொறுத்த அளவில் நான்கு ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பாஜக மூன்று, காங்கிரஸ் ஒன்று என்கிற விகிதத்தில் உள்ளது. காங்கிரஸில் 65 எம்.எல்.ஏக்கள் உள்ளனர், அவர்களில் சிலர் ஏற்கனவே வெவ்வேறு ரிசார்ட்டுகளுக்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர். 182 உறுப்பினர்களைக் கொண்ட மாநில சட்டசபையில் பாஜகவுக்கு 103 உறுப்பினர்கள் உள்ளனர். ஒரு வேட்பாளர் வெற்றி பெற 34 வாக்குகள் தேவை.

பாஜக தனது மசோதாக்களை நிறைவேற்ற மாநிலங்களவையில் பெரும்பான்மை முக்கியமானது. எனவே தனது பலத்தினை ராஜ்யசபாவில் பாஜக விரிவுபடுத்த முயல்கின்றது.

மத்திய பிரதேசத்தில், மூத்த தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா 22 விசுவாசமுள்ள எம்.எல்.ஏ.எஸ் உடன் பாஜகவுக்கு மாறியதை அடுத்து மார்ச் மாதம் காங்கிரஸ் அரசு அதிகாரத்தை இழந்தது. நேற்று, ஒரு ஆடியோ கிளிப் வெளிவந்தது, அதில் பாஜக முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆட்சி மாற்றத்தில் நேரடியாக ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

.