This Article is From Aug 05, 2019

காஷ்மீருக்கான சிறப்பு சட்டப்பிரிவு 370 ரத்து- ஜம்மூ காஷ்மீர் இனி யூனியன் பிரதேசம்!

ராஜ்யசபாவில் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அமித்ஷா

காஷ்மீருக்கான சிறப்பு சட்டப்பிரிவு 370 ரத்து- ஜம்மூ காஷ்மீர் இனி யூனியன் பிரதேசம்!

சிறப்பு சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்வதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்துள்ளார். 

New Delhi:

ஜம்மூ காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப் பிரிவு ரத்து செய்யப்படும் என்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. 

இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி, தனது அமைச்சரவையுடன் சந்திப்பு நடத்தியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமித்ஷா, “ஜம்மூ காஷ்மீர் மாநிலம் மாற்றியமைக்கப்படும். ஜம்மூ - காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் மாற உள்ளது” என்றும் கூறியுள்ளார்.

இது குறித்த 10 முக்கிய தகவல்கள்:

1.சிறப்பு சட்டப் பிரிவு 370 மூலம், காஷ்மீருக்கென்று தனியாக சட்ட சாசனம், கொடி, தேசிய பாதுகாப்பைத் தவிர்த்து சட்டம் இயற்றிக் கொள்ளும் உரிமை ஆகியவை கொடுக்கப்பட்டிருந்தன.

2.1947 ஆம் ஆண்டு காஷ்மீர், இந்தியாவுடன் சேர்க்கப்பட்டதற்கு 370 சட்டப் பிரிவு முக்கிய பங்காற்றியது. 

3.சட்டப் பிரிவு 370 இருக்கும் வரையில், மத்திய அரசு எந்தச் சட்டம் இயற்றினாலும் அதற்கு ஜம்மூ காஷ்மீர் மாநில அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று நிலை இருந்தது. 

4.ஜம்மூ காஷ்மீர் மாநிலம் மாற்றியமைக்கப்படும். ஜம்மூ - காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் மாற உள்ளது

5.கடந்த ஒரு வாரமாக ஜம்மூ காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் பெருமளவு குவிக்கப்பட்டனர். மேலும் மாநிலத்தில் உள்ள முன்னாள் முதல்வர்களான ஒமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்டி மற்றும் பிரதான அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். 

6.காஷ்மீரில் இணைய சேவை மற்றும் போன் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக் கிழமை, மத்திய அரசு, மிகவும் அசாதாரண வகையில் அமர்நாத் யாத்ரிகர்களை உடனடியாக மாநிலத்தில் இருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொண்டது. 

7.இன்று காலை பிரதமர் மோடி, தனது அமைச்சரவையை கூட்டி பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அறிவிப்பை வெளியிட்டார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

8.ஜம்மூ காஷ்மீரில் அனைத்து கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. மக்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

9.சிறப்பு சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்வதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்துள்ளார். 

10.வீட்டுச் சிறை வைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒமர் அப்துல்லா, “கார்கில், லடாக் மற்றும் ஜம்மூவில் இருக்கும் மக்களுக்கு நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நமக்கும் நமது மாநிலத்துக்கும் என்ன நடக்கப் போகிறது என்பது தெரியவில்லை. தற்போது நடந்து வரும் விஷயங்களால் பலரும் அதிருப்தியில் இருப்பீர்கள் என்று தெரியும். ஆனால், சட்டத்தை உங்கள் கைகளில் எடுக்க வேண்டாம். அமைதியாக இருங்கள்” என்று ட்வீட்டர் மூலம் கூறியுள்ளார். 


 

.