This Article is From Jan 03, 2020

''குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றுவதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை'' : அமித் ஷா!!

நாடு முழுவதும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், பாஜகவின் நிலைப்பாட்டை உறுதி செய்யும் நடவடிக்கையில் அமித் ஷா இறங்கியுள்ளார்.

''குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றுவதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை'' : அமித் ஷா!!

குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக காங்கிரசை விமர்சித்துள்ளார் அமித் ஷா.

Jodhpur:

குடியுரிமை சட்ட திருத்தத்தை நிறைவேற்றுவதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்று மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக தேசிய தலைவருமான அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்த சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என்று குறிப்பிட்டுள்ள அவர், சட்டத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார்.

குடியுரிமை சட்ட திருத்தம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று கூறி பல்வேறு போராட்டங்கள் நாடு முழுவதும் நடந்து வருகிறது.

இந்த நிலையில், குடியுரிமை சட்ட திருத்தம் என்பது மத்திய பாஜக அரசின் சரியான நடவடிக்கை என்பதை உறுதி செய்யும் இடத்தில் அமித் ஷா உள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு, உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது-
சிறுபான்மை மக்களை திருப்திபடுத்துவதற்காக காங்கிரஸ் கட்சி குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து  தவறான தகவல்களை பரப்பி வருகிறது. எதிர்க்கட்சிகளான மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் ஆகியவை இந்த சட்டத்தை எதிர்க்கின்றன. அவை குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக  தவறான தகவல்களை பரப்புகின்றன. 

அவர்களுக்கு தைரியம் இருந்தால் என்னுடன் இது சம்பந்தமாக விவாதம் செய்யட்டும். இல்லாவிட்டால், குடியுரிமை சட்டம் தொடர்பான தகவல்களை இத்தாலி மொழியில் மொழிபெயர்ப்பு செய்கிறேன். அப்போது உங்களால் படித்து உணர முடியும். 

குடியுரிமை சட்டம் தொடர்பாக மக்களை தவறாக காங்கிரஸ் கட்சி வழி நடத்துகிறது. இதனால் இளைஞர்கள், தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்துகின்றனர். எந்த அளவுக்கு நீங்கள் பொய் சொல்லிக் கொண்டிருந்தாலும், நாங்கள் சிறுபான்மை மக்களிடத்திலும், இளைஞர்களிடத்திலும் இந்த சட்டத்தை கொண்டு சேர்ப்போம். 

இவ்வாறு அமித் ஷா பேசினார். தனது பேச்சின்போது, இத்தாலி மொழி என்று கூறி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் அமித் ஷா விமர்சித்தார். 

குடியுரிமை சட்ட திருத்தம் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது. இதனை திரும்பப் பெற வலியுறுத்தி பல்வேறு இடங்களில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளன. போராட்டத்தின்போது போலீசார், போராட்டக்காரர்கள் இடையே மோத்ல் ஏற்பட்ட சம்பவங்களும் நடந்திருக்கின்றன. 

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் அல்லாதவர்கள், மத அச்சுறுத்தலால் இந்தியாவுக்கு வந்திருப்பார்கள் என்றால் அவர்களுக்கு குடியுரிமை சட்ட திருத்தம் குடியுரிமை வழங்க வகை செய்கிறது. இதில் மத பாகுபாடு காட்டப்படுவதாகவும், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று கூறியும் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. 

.