This Article is From Aug 25, 2020

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 60,975 பேருக்கு கொரோனா பாதிப்பு- 10 தகவல்கள்!

Coronavirus: இதுவரை உலகளவில் 2.36 கோடி பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 60,975 பேருக்கு கொரோனா பாதிப்பு- 10 தகவல்கள்!

Coronavirus: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிட்-19 தடுப்பு மருந்து, இந்தியாவில் தனது 2வது நிலை மனிதர்கள் மீதான மருத்துவப் பரிசோதனையை இன்று தொடங்குகிறது.

ஹைலைட்ஸ்

  • இந்தியாவில் மீண்டும் 60,000க்கு மேல் பதிவான கொரோனா பாதிப்பு
  • மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31 லட்சத்தை தாண்டியது
  • 5 மாநிலங்களில் அதிக பாதிப்பு பதிவாகியுள்ளது
New Delhi:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 60,975 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 31,67,323 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் 848 பேர் இறந்துள்ளதாகவும், இதனால் மொத்த இறப்பு எண்ணிக்கை 58,390 ஆக உயர்ந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமையான நேற்று 66,559 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 24,05,585 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையிலான மீட்பு எண்ணிக்கையால் மீட்பு விகிதமானது 75.91 சதவீதமாக ஆக இருக்கிறது. 

இது குறித்தான முக்கிய 10 தகவல்கள்:

1.உலகளவில் இந்தியாவில்தான் கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதியிலிருந்து அதிக கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. உலகில், அமெரிக்காவிலும் பிரேசிலும்தான் கொரோனா பாதிப்புகள் அதிகமாக பதிவாகியுள்ளன. 

2.கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழகம், கர்நாடகா மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த மாநிலங்களில்தான் அதிக கொரோனா இறப்புகளும் பதிவாகியுள்ளன. 

3.கொரோனா தொற்று ஆரம்பித்தது முதலே இந்த 5 மாநிலங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக பதிவாகியுள்ளன. அதிக பாதிப்புகள் எண்ணிக்கையில் 2வது இடத்தில் இருந்த டெல்லி, தற்போது 6வது இடத்தில் உள்ளது. 

4.அரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார், தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக நேற்று தெரிவித்தார். அம்மாநிலத்தில் இதுவரை 55,460 கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. 

5.கடந்த இரண்டு மாதங்களில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

6.ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிட்-19 தடுப்பு மருந்து, இந்தியாவில் தனது 2வது நிலை மனிதர்கள் மீதான மருத்துவப் பரிசோதனையை இன்று தொடங்குகிறது. புனேவின் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா (SII) நிறுவனம், இந்தியாவில் சோதனையை செய்ய உள்ளது. 

7.கர்நாடகாவில் பயணம் செய்பவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இனி பயணம் செய்பவர்களுக்கு எந்தவித குவாரன்டீன் கட்டுப்பாடுகளும் இருக்காது. 

8.பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து பணம் ஒதுக்கப்பட்டு, பிகாரில் 500 படுக்கைகள் கொண்ட இரண்டு கோவிட்-19 மருத்துவமனைகள் உருவாக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பிகார் மாநிலத்தில் கொரோனாவுக்கான சிகிச்சை மேம்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

9.இதுவரை உலகளவில் 2.36 கோடி பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8.12 லட்சம் பேர் தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். 

10.உலகிலேயே மிக அதிகமாக அமெரிக்காவில் 57.39 லட்சம் கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து பிரேசில் நாட்டில், 36.22 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தியா, 3வது இடத்தில் உள்ளது. 


 

.