This Article is From Sep 12, 2019

Congress: “இதெல்லாம் போதவே போதாது…”- கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தில் கொந்தளித்த சோனியா!

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி, தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பலகட்ட ஆலோசனைக்குப் பின்னர் சோனியா காந்தி, இடைக்கால தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 

New Delhi:

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி நியமிக்கப்பட்டு ஒரு மாத காலமே முடிவடைந்துள்ள நிலையில், கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தில், பாஜக-வை எப்படி எதிர்ப்பது என்பது குறித்துப் பேசியுள்ளார். “சமூக வலைதளங்களில் அரசை மூர்க்கத்துடன் எதிர்த்தால் மட்டும் போதாது…” என்று கட்சியினரிடம் தெரிவித்துள்ளார் சோனியா.

அவர் மேலும், “இப்போதைப் போல எப்போதும் ஜனநாயகம் பெரிய ஆபத்தில் இருந்ததில்லை. நான் சில வாரங்களுக்கு முன்னர் சொன்னது போல, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் கொடுத்த தீர்ப்பை இந்த அரசு துஷ்பிரயோகம் செய்து வருகிறது. 

தெருக்களிலும், கிராமங்களிலும், நகரங்களிலும் களத்தில் இறங்கி பாஜக-வுக்கு எதிராக போராட காங்கிரஸ், தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். நாட்டில் பல்வேறு பிரச்னைகள் தலைவிரித்தாடுகிறது. 

பொருளாதார நிலை தொடர்ந்து மந்தமாகவே உள்ளது, வேலையிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது, முதலீட்டாளர்களின் நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளது, இந்த நிலைமை குறித்து அரசுக்கு ஒன்றும் புரியவில்லை. அதை உணர்ந்தும் அவர்கள் செயல்பட மறுக்கிறார்கள்.

கட்சியில் இருக்கும் அனைத்து மூத்த நிர்வாகிகள் மற்றும் முதல்வர்கள், பூத் அளவில் இருக்கும் கட்சித் தொண்டர்களை சந்தித்து உரையாட வேண்டும். அவர்களுக்கு பயிற்சி கொடுக்கவும் முன்வர வேண்டும்” என்றுள்ளார். 

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் நம்மிடம் பேசுகையில், கட்சியில் ஆள் சேர்ப்பதற்கான புதிய திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் வீட்டுக்கு வீடு சென்று பிரசாரம் செய்யும் திட்டமும் தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். வரும் அக்டோபர் 2 ஆம் தேதி, மிகப் பெரிய திட்டம் ஒன்றையும் காங்கிரஸ் தொடங்க உள்ளதாம். 

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி, தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்குக் கிட்டத்தட்ட 2 மாதங்கள் தலைவர் என்று யாரும் நியமிக்கப்படவில்லை. பலகட்ட ஆலோசனைக்குப் பின்னர் சோனியா காந்தி, இடைக்கால தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 

.