கடந்த ஆண்டு டிச.31ஆம் தேதி ரஜினிகாந்த் தனது அரசியல் வருகை குறித்து அறிவித்திருந்தார்.
Chennai: பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று கூடுவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, பாஜக ஆபத்தானது என எதிர்கட்சிகள் நினைப்பதால் கூட்டணி அமைக்கின்றனர். அப்படியென்றால் அது ஆபத்துதானது தானே என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக ஆபத்தானது என எதிர்கட்சிகள் நினைப்பதாகவும், தான் நினைக்கவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் பாஜக ஆபத்தானதா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
2019 நாடாளுமன்ற தேர்தலில் பல கட்சிகள் ஒன்று சேர்ந்து பாஜகவிற்கு எதிர்கட்சியாக மிகப்பெரிய கூட்டணியை அமைத்து வருகின்றன. இதுகுறித்து கருத்து தெரிவித்த ரஜினிகாந்த், 10 பேர் சேர்ந்து ஒருவரை வீழ்த்த நினைத்தால், அதில் யார் பலசாலி?
10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் அந்த 10 பேரும் பலசாலியா? 10 பேரை எதிர்த்து போராடும் அந்த ஒருவர் பலசாலியா? என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். இதைவிட தெளிவாக எப்படி சொல்வது என்றார்.
பாஜக ஆபத்தான கட்சியா? இல்லையா? என்பது குறித்து என் கருத்தை இப்போது சொல்ல முடியாது. ஏனென்றால் நான் இன்னும் முழு அரசியலில் இறங்கவில்லை என்றார்.
ரஜினிகாந்த், கடந்த ஆண்டு டிச.31ஆம் தேதி தனது அரசியல் வருகை குறித்து அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு பின்னர் கடந்த மார்ச் மாதத்தில் இதுகுறித்து முதல்முறையாக பேசினார். அதன் பின்னர் அவரது அரசியல் வருகை குறித்தும் கூட்டணி குறித்தும் பல யூகங்கள் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, எனக்கு பின்னால் பாஜக இருப்பதாக கூறுகின்றனர். அது உண்மையல்ல. எனக்கு பின்னால் கடவுளும், மக்களுமே உள்ளனர் என்று அவர் கூறியிருந்தார்.