கொரோனா பாதிப்பு உயர்வு: மே.31ம் தேதிக்கு பின்னரும் மும்பையில் ஊரடங்கை நீட்டிக்க முடிவு!
Mumbai: கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து, அதிகரித்து வரும் நிலையில் மும்பையில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தெரிகிறது.
இதுதொடர்பாக மாநில நீர்வளத்துறை அமைச்சர் ஜெயந்த் பாட்டீல் கூறும்போது, 29 மற்றும் 30ம் தேதியில் நிலைமையை மதிப்பாய்வு செய்வோம். இதைத்தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து வரும் அறிவிப்பை பொறுத்து, 31ம் தேதிக்கு பின்னர் தளர்வு அளிக்கலாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். எனினும், பிரதமர் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று விரும்பினால், நாங்கள் அதனை பின்பற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மகாராஷ்டிராவில் உள்ள அதிகாரிகள் கூறும்போது, ஊரடங்கை நீட்டிப்பது என்பது மத்திய அரசின் முடிவை சார்ந்தது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் போன்ற மூத்த அரசியல் தலைவர்கள் படிப்படியாக எச்சரிக்கையுடன் ஊரடங்கு தளர்த்த வேண்டும் என்பதற்கு ஆதரவாக உள்ளனர். எனினும், முதல்வர் உத்தவ் தாக்கரே ஊரடங்கு தளர்த்தினால், மேலும் கொரோனா பரவல் அதிகமாகும் என்பதால் ஊரடங்கை நீட்டிக்கு வேண்டும் என்று நினைக்கிறார்.
நாட்டில் மொத்தமாக ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பில் 70 சதவீதம் 13 நகரங்களிலே ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிப்பு அதிகமாக உள்ள பகுதியின் மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் நேற்றைய தினம் அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா கலந்தாலோசித்தார்.
அதில், மும்பை, சென்னை, டெல்லி, அகமதாபாத், தானே, புனே, ஐதராபாத், கொல்கத்தா, இந்தூர், ஜெய்ப்பூர், ஜோத்பூர், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட நகரங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு நீடித்தாலும், கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு மாநில அரசு திட்டமிட்டு வருகிறது. விற்பனை நிகழும்போதுதான் பொருளாதாரத்தை மறுசீரமைக்க முடியும் என்றும் ஊரடங்கு இருக்கும் வரை அது நடக்காது என்றும் தொழில்துறைகள் தெரிவித்துள்ளன.
4வது கட்ட ஊரடங்கு அதன் முடிவை நெருங்குவதால், அடுத்த சில நாட்களில் மகாராஷ்டிரா அமைச்சரவை கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பாதிப்புக்கு இடமளிக்க கூடுதல் மருத்துவ உள்கட்டமைப்பை அரசு உருவாக்கிய பின்னர் திறப்பது ஒரு விருப்பமாக இருக்கலாம் என்று மாநில சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
மும்பையில் மொத்தம் 35,485 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 25,694 சிகிச்சை பெற்று வருகின்றனர். மும்பையில் மட்டும் 1,135 பேர் உயிரிழந்துள்ளனர். அதனால், வரும் நாட்களில் ஊரடங்கு நீக்கப்பட வாய்ப்பில்லை என்று தெரிகிறது. நகரில் 8,650 நோயாளிகள் குணமடைந்துள்ளனர், மும்பையில் நேற்றைய தினம் மட்டும் புதிதாக 1,467 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 38 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் 2,598 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 85 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக மாநிலத்தில் இப்போது 59,546 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,982 உயிரிழந்துள்ளனர். 38,939 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.