This Article is From Jan 23, 2020

திமுகவின் தலைவராக துரைமுருகனை ஸ்டாலின் அறிவிப்பாரா? ஜெயக்குமார் கேள்வி

திமுகவில் இது சாத்தியமா? தந்தைக்கு பின் மகன், பிறகு பேரன் உதயநிதி என திமுகவில் வாரிசுதான் தொடரும்.

திமுகவின் தலைவராக துரைமுருகனை ஸ்டாலின் அறிவிப்பாரா? ஜெயக்குமார் கேள்வி

அதிமுகவின் அடிமட்ட தொண்டனும் முதல்வராகலாம் என்பதற்கு எடப்பாடி பழனிசாமியே உதராணம் - ஜெயக்குமார்

திமுகவின் தலைவராக துரைமுருகனை ஸ்டாலின் அறிவிப்பாரா? என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். 

முன்னதாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் போது, திமுகவில் கலைஞர் கருணாநிதிக்கு பிறகு அவரது மகன் மு.க.ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். 

தற்போது மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு அந்த பதவி வழங்கப்பட்டுள்ளது. ஒரு சாதாரண நபர் திமுகவில் உயர்ந்த பதவிக்கு வர முடியுமா? அதிமுகவில் உள்ள அனைவரும் உயர்ந்த இடத்திற்கு வரமுடியும். அதிமுகவில் இருப்பவர்கள் அனைவருமே முதல்வர் ஆவதற்கான தகுதி உடையவர்கள். ஒரு பழனிசாமி அல்ல. ஓராயிரம் பழனிசாமிகள் அதிமுகவில் உள்ளனர் என்றும் பேசினார். 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக பொருளாளர் துரைமுருகன், அதிமுகவில் எல்லோரும் முதல்வர் பதவிக்கு வரலாம் என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். 

அப்படி என்றால் ஏற்கனவே 3 முறை முதல்வராக இருந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி விட்டுக்கொடுக்க தயாரா?. வாரிசு அரசியல் பற்றி பேசுகிறார்கள். கருணாநிதி வீட்டிலிருந்து மட்டும் வந்தால் வாரிசு அரசியலா? நேரு, தேவகவுடா, முலாயம் சிங் போன்றவர்களின் வீட்டில் இருந்து வந்தால் வாரிசு அரசியல் இல்லையா?, என்று கேள்வி எழுப்பினார். 

இந்நிலையில், துரைமுருகனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, அதிமுகவின் அடிமட்ட தொண்டனும் முதல்வராகலாம் என்பதற்கு எடப்பாடி பழனிசாமியே உதராணம்.

திமுகவில் இது சாத்தியமா? தந்தைக்கு பின் மகன், பிறகு பேரன் உதயநிதி என திமுகவில் வாரிசுதான் தொடரும். திமுகவின் தலைவராக துரைமுருகனை ஸ்டாலின் அறிவிப்பாரா? துரைமுருகனுக்கு ஸ்டாலின் விட்டுக்கொடுப்பாரா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

.