This Article is From Jun 01, 2019

“பாஜக-வுக்கு எதிராக தினமும் போராடுவேன்!”- ராகுல் உரை

காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற 52 லோக்சபா எம்.பி-க்கள் மற்றும் ராஜ்யசபா எம்.பி-க்கள் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

சென்ற முறை காங்கிரஸின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக அக்கட்சியின் மூத்த நிர்வாகி மல்லிகார்ஜுனா கார்கே இருந்தார்.

ஹைலைட்ஸ்

  • இன்று காங்கிரஸின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் தேர்வு நடந்தது
  • சோனியா காந்தி,கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்
  • லோக்சபாவில் காங்கிரஸ் சார்பில் 52 எம்.பி-க்கள் உள்ளனர்
New Delhi:

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு காங்கிரஸ் எம்.பி-க்கள் இன்று ஒன்று கூடினார்கள். கூட்டத்தில் சோனியா காந்தி, நாடாளுமன்றக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவராக நீடிப்பாரா அல்லது விலகுவாரா என்ற கேள்விக்கு பதில் கிடைக்காமலேயே இன்றைய சந்திப்பு நடந்து முடிந்துள்ளது. 

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர், “நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று ராகுல் சொன்னது குறிப்பிடத்தக்கது. 

ராகுலின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயும், வெளியில் இருந்தும் எதிர்ப்புக் குரல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால், தனது முடிவில் ராகுல் ஸ்திரமாக இருப்பதாகத் தெரிகிறது. 

இன்று நாடாளுமன்றக் குழுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் சந்திப்பில் உரையாற்றிய ராகுல், “நமக்கு லோக்சபாவில் 52 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் பாஜக-வுக்கு எதிராக தினமும் போராடுவார்கள். 

நீங்கள் யார் என்பது குறித்த புரிதல் உங்களுக்கு இருக்க வேண்டும். ஒவ்வொரு இந்தியனுக்காகவும் நீங்கள் போராடுகிறீர்கள். வெறுப்பு, கோழைத்தனம் மற்றும் கோபம் உங்களுக்கு எதிராக சண்டையிடுகிறது… நீங்கள் இன்னும் மூர்க்கமாக போராட வேண்டும்.

முன்னர் மக்களவையில் இருந்தவர்கள் இங்கு இருந்திருந்தால் நான் இன்னும் மகிழ்ந்திருப்பேன். இருப்பினும் அவர்கள் கொள்கை ரீதியாக நம்முடன்தான் உள்ளனர். நம்மால் இது முடியும்” என்று உணர்ச்சிபூர்வமாக பேசினார். 

சென்ற முறை காங்கிரஸின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக அக்கட்சியின் மூத்த நிர்வாகி மல்லிகார்ஜுனா கார்கே இருந்தார். அவர் இந்த முறை கர்நாடகாவின் குல்பர்கா தொகுதியில் பாஜக வேட்பாளரால் தோற்கடிக்கப்பட்டார். 

சோனியா காந்தி, இன்றைய கூட்டத்தில் பேசும்போது, “மோடி அரசுக்கு எதிராக இரவும் பகலும் உழைத்த ராகுல் காந்திக்கு நன்றி. ராகுல் தொடர்ந்து தலைவராக இருக்க வேண்டும் என்று உணர்வுபூர்வமாக பல இடங்களில் இருந்து தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. காங்கிரஸ் காரிய கமிட்டி இது குறித்து சீக்கிரம் நடவடிக்கை எடுக்கும்” என்று கூறினார். 

காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற 52 லோக்சபா எம்.பி-க்கள் மற்றும் ராஜ்யசபா எம்.பி-க்கள் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

.