This Article is From May 08, 2020

“ஏன் அவர்களை கண்டுகொள்ள மறுக்கிறீர்கள்!”- மத்திய, மாநில அரசுகளை சாடும் சிதம்பரம்!!

"சரியான நேரத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக அரசு பணி செய்திருந்தால் இன்று காலையில் நடந்த சோக நிகழ்வு தவிர்க்கப்பட்டிருக்கலாம்"

“ஏன் அவர்களை கண்டுகொள்ள மறுக்கிறீர்கள்!”- மத்திய, மாநில அரசுகளை சாடும் சிதம்பரம்!!

"ரயில் மூலம் அவர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்லும் முடிவு எடுக்கப்பட்ட உடன், சாலையில் நடந்து செல்பவர்களுக்கு அரசு உதவி செய்திருக்க வேண்டும்."

ஹைலைட்ஸ்

  • கொரோனா ஊரடங்கு தற்போது இந்திய அளவில் அமலில் உள்ளது
  • ஊரடங்கினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்தான்
  • புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்தே சொந்த ஊர்களுக்குப் பயணப்பட்டுள்ளனர்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு தழுவிய ஊரடங்கு 40 நாட்களுக்கு மேலாக அமலில் உள்ளது. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு வந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்தான். ஊரடங்கு அறிவிப்பினால், பொதுப் போக்குவரத்துகள் முடங்கின. சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் பலர் தவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் பலர் நடந்தே சொந்த ஊர்களை அடைய முயன்று வருகிறார்கள். 

நிலைமை மிகவும் மோசமாகவே, மத்திய அரசு, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக ரயில் சேவையை ஏற்பாடு செய்துள்ளது. அதன் மூலம் தற்போது பலர் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பி வருகிறார்கள். 

இந்நிலையில், மும்பையிலிருந்து 360 கி.மீ தொலைவில் உள்ள அவுரங்காபாத் பகுதிக்கு அருகில் உள்ள கர்மத் என்கிற இடத்தில் ரயில் தண்டவாளத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் படுத்து தூங்கினர் என்றும், அச்சமயத்தில் அந்த வழியாக வந்த சரக்கு ரயில் அவர்கள் மீது ஏறியது என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அதிகாலை 5:15 மணியளவில் நடந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தண்டவாளங்களில் உறங்கிக்கொண்டிருந்த 20 பேர் கொண்ட குழுவின் மீது ரயில் மோதியதில் 15 பேர் பலியானதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. பெரும் அதிர்வலைகளை இச்செய்தி ஏற்படுத்தியுள்ளது. 

இது குறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியுமான ப.சிதம்பரம், “இரண்டு நாட்களுக்கு முன்னர் நான், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இன்னும் சாலை மார்க்கமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்கிறார்கள் என்று சொன்னேன். இதை ஏன் மத்திய மற்றும் மாநில அரசுகள் கண்டுகொள்ளவே இல்லை.

ரயில் மூலம் அவர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்லும் முடிவு எடுக்கப்பட்ட உடன், சாலையில் நடந்து செல்பவர்களுக்கு அரசு உதவி செய்திருக்க வேண்டும். 

சரியான நேரத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக அரசு பணி செய்திருந்தால் இன்று காலையில் நடந்த சோக நிகழ்வு தவிர்க்கப்பட்டிருக்கலாம். 

நான் தினமும் தொலைக்காட்சிகளில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு நடந்தே செல்வதைப் பார்க்கிறேன். அவர்களின் இன்னல்களை சரி செய்ய ஏன் அரசு மறுக்கிறது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

.