
“திருமதி கனிமொழி MP அவர்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் நான் உட்பட பலருக்கு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். பயணத்திற்கு முன்னதாக சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் கனிமொழியிடம் இந்தியில் கேள்வி கேட்டுள்ளார். கனிமொழி, தனக்கு இந்தி தெரியாது என்றும், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுமாறு கேட்டுள்ளார். ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரி கனிமொழியை பார்த்து நீங்கள் இந்தியர்தானே என கேள்வியெழுப்பியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த சம்பவத்தையடுத்து கனிமொழி, தன் ட்விட்டர் பக்கத்தில், “இன்று விமான நிலையத்தில் ஒரு சிஐஎஸ்எஃப் அதிகாரியிடம், இந்தி தெரியாது என்றும், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுமாறும் கேட்டேன். அதற்கு அவர், ‘நீங்கள் இந்தியர்தானா?' எனக் கேட்டார். எப்போதிலிருந்து இந்தியராக இருப்பதென்றால், இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலை உருவானது என தெரிந்து கொள்ள விரும்புகிறேன்” எனக் கூறி #hindiimposition என்கிற ஹாஷ் டேக்கை பதிவிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து சிஐஎஸ்எஃப் தரப்பு, ‘இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க நாங்கள் உத்தரவிட்டுள்ளோம். எந்த ஒரு குறிப்பிட்ட மொழியையும் திணிப்பது எங்கள் பாலிசியில் இல்லை' என்று விளக்கம் அளித்துள்ளது. அதற்கு கனிமொழி, நன்றி தெரிவித்துள்ளார்.
Thank you for the immediate response and assurance to take action. https://t.co/DaYdeBZhFD
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 9, 2020
இந்த சம்பவத்தை அடுத்துப் பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள் கனிமொழிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் ப.சிதம்பரம், “திருமதி கனிமொழி MP அவர்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் நான் உட்பட பலருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டும் அலுவல் மொழிகள் (official languages) என்பதை மறுக்கும் வகையில் பல மத்திய அரசு அதிகாரிகள் நடந்து கொள்கிறார்கள். இதை வல்லமையுடன் வன்மையாக எதிர்க்க வேண்டும்.
திருமதி கனிமொழி MP அவர்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் நான் உட்பட பலருக்கு ஏற்பட்டுள்ளது
— P. Chidambaram (@PChidambaram_IN) August 10, 2020
மத்திய அரசு பணியென்றால் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளையும் தேவைக்கேற்ப, சூழ்நிலைக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும் என்று அரசு எல்லோருக்கும் அறிவுறுத்த வேண்டும்” எனக் கருத்து தெரிவித்துள்ளார்.