This Article is From Jun 11, 2020

உ.பியில் உணவுக்காக நகைகளை விற்ற புலம் பெயர் தொழிலாளர்கள்! உடனே உதவிய அரசு நிர்வாகம்!!

இவரின் குடும்பத்திற்கு ரேசன் அட்டை கிடையாது. மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின்(MNREGA) கீழ் குடும்பத்தில் யாருக்கும் வேலை கிடைக்கவில்லை. தற்போது இரண்டும் இந்த குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.

உ.பியில் உணவுக்காக நகைகளை விற்ற புலம் பெயர் தொழிலாளர்கள்! உடனே உதவிய அரசு நிர்வாகம்!!

ஸ்ரீ ராம் திருமணத்திற்குப் பிறகு தமிழகத்திற்கு குடிபெயர்ந்தார்.

Kannauj, Uttar Pradesh:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 2.86 லட்சத்தினை கடந்துள்ள நிலையில் லட்சக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு ரயில்கள் மற்றும் பேருந்துகள் மூலமாக இலவசமாக அனுப்பி வைக்க வேண்டும் என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது. இருப்பினும் இந்த உத்தரவானது லாக்டவுன் அறிவிக்கப்பட்ட 60 நாட்களுக்கு பின்னரே வெளிவந்தது. இதற்கு இடைப்பட்ட காலங்களில் புலம் பெயர் தொழிலாளர்கள் வருவாய் இழந்தும், உணவு இல்லாமலும் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு லட்சக்கணக்கில் இந்தியாவை குறுக்கும் நெடுக்குமாக வெறும் கால்களில் நடந்து கடக்கத் தொடங்கினர்.

இந்நிலையில் தமிழகத்தில் வேலை செய்து வந்த உத்தர பிரதேசத்தை சேர்ந்த புலம் பெயர் தொழிலாளரான ஸ்ரீ ராம் லாக்டவுன் காரணத்தினால் வருவாய் இழந்து தமிழகத்தில் தங்கியிருந்த வீட்டிற்கு வாடகை கட்டாமல் மீண்டும் உத்தர பிரதேசத்திற்கே வந்து சேர்ந்து  தன் குடும்பத்தின் வருமையை போக்கவும் மருந்துகளை வாங்கவும் உத்தர பிரதேச மாநிலம்  கண்ணாஜில் உள்ள உள்ளூர் சந்தையில் தனது மனைவியின் நகைகளை ரூ.1,500 க்கு விற்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டார். அவரது அவல நிலையை உள்ளூர் ஊடகங்கள் முன்னிலைப்படுத்திய பின்னர் மாவட்ட நிர்வாகம் அவருக்கு உதவ தற்போது முன்வந்துள்ளது.

இவரின் குடும்பத்திற்கு ரேசன் அட்டை கிடையாது. மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின்(MNREGA) கீழ் குடும்பத்தில் யாருக்கும் வேலை கிடைக்கவில்லை. தற்போது இரண்டும் இந்த குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.

லக்னோவிலிருந்து 150 கி.மீ தூரத்தில் உள்ள கன்னாயுஜில் உள்ள ஃபதேபூர் ஜசோதா கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீ ராம், திருமணத்திற்குப் பிறகு தமிழகத்திற்கு குடிபெயர்ந்தார். இவர் தமிழகத்தில் கடலூரில் தனது மனைவி மற்றும் ஒன்பது குழந்தைகளுடன் குல்பி ஐஸ் விற்று பிழப்பினை நடத்தி வந்திருந்தார். லாக்டவுன் தொடங்கிய பின்னர் வருமானம் இல்லாததால் வீட்டு உரிமையாளர் வாடகை வீட்டினை காலி செய்யுமாறு வற்புறுத்தியதால் வீட்டினை காலி செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

தமிழகத்திலிருந்து இவர்கள் மே 19 அன்று ரயில் ஏறி இரண்டு நாட்களுக்கு பின்னர் உ.பி.யில் உள்ள தங்களது சொந்த கிராமத்திற்கு வந்தடைந்தனர்.

“நாங்கள் உ.பி வந்த போது அரசாங்கம் எங்களுக்கு 10 கிலோ அரிசி மற்றும் தானியங்களை கொடுத்தது. ஆனால் எங்களுடைய பெரிய குடும்பத்திற்கு அரசி மற்றும் கோதுமை போதுமானதாக இருக்கவில்லை. ரேசன் பொருட்கள் கிடைக்கவில்லை. புதிய ரேசன் அட்டைகளுக்கு விண்ணப்பித்தால், தற்போதைய நிலையில் புதிய ரேசன் அட்டை வழங்கப்படவில்லை. என் அம்மா மற்றும் என்னுடைய உடன் பிறப்புக்கள் நோய்வாய்படத் தொடங்கினர். தந்தை வேலை பெற முயன்றாலும் வேலை கிடைக்கவில்லை.“ என ஸ்ரீ ராமின் மகள்களில் ஒருவரான ராஜ் குமாரி கூறினார்.

மேலும், "இறுதியாக, என் அம்மா அணிந்திருந்த நகைகளை விற்பதைத் தவிர வேறு வழியில்லை. இது சில நாட்கள் உணவு மற்றும் சில மருந்துகளைப் பெற எங்களுக்கு  உதவியது.“ என கூறினார்.

உள்ளூர் ஊடகங்களின் மூலமாக இந்த குடும்பத்தின் நிலையறிந்த மாவட்ட நிர்வாகம் இதனை கவனத்தில் கொண்டது. "நான் ஒரு தொகுதி மேம்பாட்டு அதிகாரி மற்றும் ஒரு உணவு விநியோக அதிகாரியை விசாரிக்க கிராமத்திற்கு அனுப்பினேன். விசாரணையில் இந்த குடும்பம் சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு தங்கள் கிராமத்திற்கு வந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. நாங்கள் அவர்களுக்கு 15 நாட்களுக்கு பயன்படும் வகையில் உணவு பொருட்களை வழங்கினோம்" என்று கண்ணாஜின் மாவட்ட நீதிபதி ராகேஷ் மிஸ்ரா பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். மேலும், அவர்களுக்கு MNREGA வேலைக்கான அடையாள அட்டையும், புதிய ரேசன் அட்டையும் கொடுத்துள்ளோம். அவர்களுக்கு இனி சிரமமில்லை. என்றும் குறிப்பிட்டிருந்தார்.

தங்களது சொந்த மாநிலத்திற்கு திரும்பும் ஒவ்வொரு புலம்பெயர்ந்த தொழிலாளருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இலவச ரேஷன் மற்றும் வேலையை வழங்க உறுதிபூண்டுள்ளதாக யோகி ஆதித்யநாத் அரசு தெரிவித்துள்ளது. மேலும், ஜூன் 3 தேதியிட்ட அறிக்கையில், தற்காலிக ரேஷன் அடையாள அட்டைகளில் இந்த மாதம் 53,840 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் 1 கிலோ கிராம் இலவச ரேஷன் வழங்கியுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், ஜூன் இறுதிக்குள், 3 லட்சம் 74 ஆயிரம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ரேஷன் கார்டுகள் கிடைக்கும் என்று அரசாங்கம் கூறுகிறது.

இருப்பினும், ஸ்ரீ ராம் போன்ற பலர் இன்னமும் கஷ்டப்படுகிறார்கள்.

.