This Article is From Jul 01, 2019

சென்னை நீர் பிரச்னை: புயலைக் கிளப்பும் கிரண்பேடி சொன்ன சர்ச்சை கருத்து!

இன்று இந்த விவகாரத்தை திமுக தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் எழுப்பியுள்ளார்

சென்னை நீர் பிரச்னை: புயலைக் கிளப்பும் கிரண்பேடி சொன்ன சர்ச்சை கருத்து!

"கிரண் பேடி, ஒட்டு மொத்த தமிழ்நாட்டையே அசிங்கப்படுத்தும் வகையில் பேசியுள்ளார்."

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக சென்னையில் இந்தப் பிரச்னை மிக அதிகமாக உள்ளது. சென்னை நீர் பிரச்னை குறித்து ‘டைட்டானிக்' திரைப்பட கதாநாயகன் லியனாட்டோ டிகாப்ரியோ ட்வீட் செய்யும் அளவுக்கு மோசமாக உள்ளது. இப்படிப்பட்ட நேரத்தில் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி, சென்னையில் நிலவிவரும் தண்ணீர் பிரச்னை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறியுள்ளார். 

கிரண்பேடி, புதுச்சேரி பத்திரிகையாளர்கள் இருக்கும் வாட்ஸ்-அப் குழுவில் தமிழக தண்ணீர் பிர்சனை குறித்து கருத்து கூறியுள்ளதாக பல செய்தி நிறுவனங்களும் தகவல் தெரிவித்தன. அதைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்திலும் இது குறித்து பதிவிட்டுள்ளார். “இந்தியாவின் 6வது பெரிய நகரமான சென்னையில் நிலத்தடி நீர் முற்றிலுமாக தீர்ந்துள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நகரம்தான் வெள்ளத்தில் தத்தளித்தது. இதற்கு என்ன காரணம்?

மிகவும் மோசமான அரசு நிர்வாகம், ஊழல் படிந்த அரசியல் மற்றும் ஒற்றுமை இல்லாம நிர்வாக மட்டம், துணிவற்ற மக்கள் ஆகியவையே காரணம்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

இன்று இந்த விவகாரத்தை திமுக தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் எழுப்பியுள்ளார். அது குறித்து அவருக்கு பேச அனுமதி மறுக்கப்படவே, வெளிநடப்பு செய்தார். பின்னர் பேரவை வளாகத்தில் செய்தியாளர்கள் சந்தித்த ஸ்டாலின், “புதுவை ஆளுநர் கிரண் பேடி, தான் ஒரு ஆளுநர் என்பதையே மறந்துவிட்டு, தமிழகத்தில் நிலவிவரும் தண்ணீர் பிரச்னை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறிய கருத்துகளை இன்றை செய்தித் தாள்கள் அச்சிட்டுள்ளன.

அவர், ‘சென்னையில் தண்ணீர் பிரச்னை வர யார் காரணம். மிகவும் மோசமான அரசு நிர்வாகம், ஊழல் படிந்த அரசியல் மற்றும் ஒற்றுமை இல்லாம நிர்வாக மட்டம், துணிவற்ற மக்கள் ஆகியவையே காரணம்' என்றுள்ளார். இது குறித்து எதிர்ப்பு தெரிவித்து பேச நான் பேரவைத் தலைவரிடம் அனுமதி கோரினேன். ஆனால், எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்துதான் வெளிநடப்பு செய்தோம். 

கிரண் பேடி, ஒட்டு மொத்த தமிழ்நாட்டையே அசிங்கப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். அது குறித்து ஆளுங்கட்சிக்கு எந்த வெட்கமும் இல்லை. நான் பேசியதைத் தொடர்ந்து பேசிய சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ‘கிரண் பேடி மீது ஏற்கெனவே நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அவர் கூறியதை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அவருக்கு தமிழக அரசியல் சூழல் குறித்து பேச தகுதியில்லை' என்று பதில் அளிக்கிறார்” என்று கூறினார்.

.