This Article is From Jun 19, 2019

''உலகில் 220 கோடி பேருக்கு குடிக்க சுகாதாரமான தண்ணீர் இல்லை'' - ஐ.நா. அதிர்ச்சி தகவல்

420 கோடி பேர் சுகாதாரமான கழிவுநீர் கால்வாய்கள் இல்லாமல் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

''உலகில் 220 கோடி பேருக்கு குடிக்க சுகாதாரமான தண்ணீர் இல்லை'' - ஐ.நா. அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

New York:

உலகில் 220 கோடி பேருக்கு குடிக்க சுகாதாரமான தண்ணீர் வசதி இல்லை என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல இந்திய மாநிலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. 

ஐ.நா.வின். ஒரு பிரிவான உலக சுகாதார நிறுவனம் மற்றும் குழந்தைகளுக்கான ஐ. நா. நிறுவனமான யூனிசெப் ஆகியவை இணைந்து ஆய்வு ஒன்றினை மேற்கொண்டது. கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையில் குடிநீர், சுகாதாரம் தொடர்பான கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளது. இதன்படி உலகில் 220 கோடி பேர் சுகாதாரமான குடிநீர் வசதியின்றி தவிப்பது தெரியவந்துள்ளது. 

இதேபோன்று, திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கம் 21 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 67.3 கோடி பேர் திறந்த வெளியில் கழிவுகளை கழித்து வருவதாகவும், இது பல நாடுகளுக்கு சிக்கலை ஏற்படுத்துவதாகவும் ஐ.நா. ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இந்த ஆய்வறிக்கை தொடர்பாக யூனிசெஃப் அமைப்பின் குடிநீர், சுகாதார பிரிவின் இயக்குனர் கெல்லி ஆன் கூறியதாவது- 
குழந்தைகளுக்கு அத்தியாவசியமாக இருக்கும் குடிநீர் மற்றும் கழிவறை வசதிகளை உலக நாடுகள் அனைத்தும் ஏற்படுத்தி தர வேண்டும். தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்தல், சுகாதாரமான கழிவு நீர்கால்வாய்கள் ஆகியவற்றை அமைப்பது, அரசுகளின் முக்கிய திட்டமாக இருக்க வேண்டும். 
இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

ஒவ்வொரு ஆண்டும் 5 வயதுக்குட்பட்ட 2,97,000 குழந்தைகள் வயிற்றுப்போக்கால் உயிரிழப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இதற்கு போதுமான தண்ணீர் இல்லாத, சுகாதாரமற்ற தண்ணீர் பயன்பாடு உள்ளிட்டவை முக்கிய காரணங்களாகும். 
 

.