Vikas Dubey Encounter: தற்போது இந்த என்கவுன்ட்டர் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
ஹைலைட்ஸ்
- நேற்று ம.பி-யில் கைது செய்யப்பட்டார் விகாஸ் துபே
- இன்று உ.பி-க்கு அழைத்து வரப்பட்டார்
- இன்று காலை 7 மணி அளவில் என்கவுன்ட்டர் சம்பம் நடந்துள்ளது
Vikas Dubey Encounter: உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ரவுடி விகாஸ் துபே கைது செய்யப்பட்டு மத்திய பிரதேசத்தில் இருந்து சொந்த மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது சாலை விபத்தில் அவர் சென்ற கார் சிக்கியது என்றும், பின்னர் அங்கிருந்து அவர் தப்ப முயன்றபோது என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதாகவும் போலீஸ் தரப்பு தகவல் தெரிவிக்கிறது.
உத்தர பிரதேசத்தில் சில நாட்களுக்கு முன்னர் ஒரு காவல்துறை உயர் அதிகாரி உட்பட 8 காவலர்களைக் கொல்லப்பட்டனர். இந்தக் கொலைகளுக்குப் பின்னணியில் விகாஸ் துபேதான் இருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து துபேவைக் கைது செய்ய முயன்றபோது, அவர் பல இடங்களுக்குத் தப்பிச் சென்றார்.
இந்நிலையில் நேற்று மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் உள்ள ஒரு கோயிலில் விகாஸ் துபே கைது செய்யப்பட்டார். அவரை இன்று அதிகாலை உத்தர பிரதேசம் அழைத்து வர முற்பட்டபோதுதான், என்கவுன்ட்டர் சம்பவம் நடந்துள்ளது.
இன்று காலை உத்தர பிரதேசத்தின் சுங்கச் சாவடி ஒன்றில், விகாஸ் துபேவை அழைத்துச் சென்ற போலீஸ் கார் தென்பட்டுள்ளது. மூன்று கார்களில் போலீஸ் பாதுகாப்புடன் அவர் கொண்டு செல்லப்பட்டார். அப்போது அவர் வேறு ஒரு காரில் இருந்தார் என்றும், என்கவுன்ட்டர் சமயத்தில் விபத்துக்கு உள்ளானது இன்னொரு கார் என்றும் கூறப்படுகிறது.
இந்த கார் மாற்றம் குறித்து போலீஸ் தரப்பு விளக்கம் அளிக்க மறுத்துவிட்டது.
இன்னொரு வீடியோ இன்று காலை 6:30 மணிக்கு எடுக்கப்பட்டுள்ளது. என்கவுன்ட்டர் சம்பவம் நடப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. வீடியோவில், விகாஸ் துபே இருக்கும் காரை பின் தொடர்ந்து செல்கின்றன ஊடக நிறுவனங்களின் கார்கள். திடீரென்று போலீஸ், பத்திரிகையாளர்களின் வாகனத்தை மட்டும் நிறுத்துகிறார்கள். விகாஸ் துபே மற்றும் போலீஸார் இருந்த கார்கள் முன்னோக்கிச் செல்கின்றன.
#WATCH Media persons, who were following the convoy bringing back gangster Vikas Dubey, were stopped by police in Sachendi area of Kanpur before the encounter around 6.30 am in which the criminal was killed. (Earlier visuals) pic.twitter.com/K1B56NGV5p
— ANI UP (@ANINewsUP) July 10, 2020
இந்த என்கவுன்ட்டர் சம்பவம் பற்றி பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். நேற்று, உச்ச நீதிமன்றத்திலும், விகாஸ் துபேவுக்கு உரிய பாதுகாப்புக் கொடுக்க வேண்டும் என்று மனுத் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது இந்த என்கவுன்ட்டர் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
என்கவுன்ட்டர் நடந்தபோது சம்பவ இடத்தில் இருந்த அஷ்வின் பஸ்வான் என்னும் நபர், “நான் என்கவுன்ட்டர் நடந்த இடத்தில்தான் இருந்தேன். ஆனால், திடீரென்று போலீஸ் எங்களை கிளம்புமாறு வலியுறுத்தினர். ஆனால், தோட்டா சத்தம் எனக்குக் கேட்டது. எங்கள் வீட்டுக்குப் போகும் போது இச்சம்பவம் நடந்தது” என்கிறார்.