இங்கிலாந்து நீதிமன்றம், சென்ற மாதம், ‘மல்லையா, இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்படலாம்’ என்று தீர்ப்பு வழங்கியது.
Mumbai: பண மோசடி வழக்கில் சிக்கியுள்ள, கிங்ஃபிஷர் நிறுவனத்தின் தலைவரும் தொழிலதிபருமான விஜய் மல்லையாவை இந்தியாவுக்குக் கொண்டு வர மத்திய அரசு அனைத்து வகையிலும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அவர் ‘தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டம், 2018'-க்குக் (Fugitive Economic Offenders Act, 2018) கீழ் நாட்டுக்குக் கொண்டு வரப்படலாம் என்று சொல்லப்படுகிறது. அப்படி செய்வதன் மூலம் அவர்தான் இந்தச் சட்டத்துக்குக் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் முதல் நபர் ஆவார்.
இந்தியாவின் பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா 62 வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பியோடி விட்டார். இந்திய அமலாக்கத்துறை, சிறப்பு நீதிமன்றத்தில் லண்டனில் புகலிடம் தேடி ஓடிய விஜய் மல்லையாவை தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கக்கோரி கேட்டிருந்தது. நீதிமன்றம் இன்று மல்லையாவை, பண மோசடி வழக்கில் குற்றவாளிதான் என்று அறிவித்தால், பொருளாதார குற்றவாளி சட்டத்துக்குக் கீழ் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார். இங்கிலாந்து நீதிமன்றத்தில் தனக்கு எதிரான வழக்கை நடத்தி வருகிறார் மல்லையா.
இந்தச் சட்டத்துக்கு இந்திய ஜனாதிபதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் வழங்கினார். சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெறும் தொழிலதிபர்கள், அதைத் திரும்ப செலுத்த முடியாமல் நாட்டை விட்டு ஓடினால், இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி கைது செய்யலாம்.
இங்கிலாந்து நீதிமன்றம், சென்ற மாதம், ‘மல்லையா, இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்படலாம்' என்று தீர்ப்பு வழங்கியது. எனவே, கூடிய சீக்கிரம் இந்திய சிறையில் மல்லையா அடைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.