This Article is From Jun 04, 2020

'சட்ட பிரச்னைகள் உள்ளன; மல்லையாவை இந்தியா கொண்டுவர முடியாது' - அதிகாரிகள் தகவல்

மல்லையா இந்தியா கொண்டுவரப்படுவது உறுதியாகி விட்டதென தகவல்கள் காட்டுத்தீயாகப் பரவியது.  இந்த நிலையில், மத்திய அரசு  அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.

'சட்ட பிரச்னைகள் உள்ளன; மல்லையாவை  இந்தியா கொண்டுவர முடியாது' - அதிகாரிகள் தகவல்

இந்தியா கொண்டுவரப்படுவதை எதிர்த்து மல்லையா தொடர்ந்த மனு கடந்த மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது.

New Delhi:

சட்டப் பிரச்னைகள் தீர்க்கப்படாமல் இருப்பதால் தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வர முடியாது என்று மத்திய அரசு  அதிகாரிகள் NDTVக்கு தெரிவித்துள்ளனர்.

சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடி வழக்கில் தேடப்படும் விஜய் மல்லையா இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு தப்பிச் சென்று அங்கு வசித்து வருகிறார்.  அவரை இந்தியா கொண்டு வருவதற்காக மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இதற்கிடையே, மல்லையா இந்தியா கொண்டுவரப்படுவது உறுதியாகி விட்டதென தகவல்கள் காட்டுத்தீயாகப் பரவியது.  இந்த நிலையில், மத்திய அரசு  அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.

'கடந்த மாதம் இந்தியா கொண்டுவரப்படுவதை எதிர்த்து  மல்லையா தொடர்ந்த மனு லண்டன் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து இங்கிலாந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியும். இந்த  விவகாரத்தில்  சட்ட சிக்கல்கள்  முழுவதுமாக தீர்க்கப்படவில்லை. அவை முடிக்கப்பட்டால் மட்டுமே மல்லையாவை இந்தியா கொண்டுவருவது சாத்தியமாகும்' என்று தூதரக அதிகாரிகள் NDTVக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர். 

இங்கிலாந்தின் வெளியேற்ற சட்டத்தின்படி, ஒருவர் நாட்டை விட்டு வெளியேற்றப்படலாம் என உயர் அல்லது உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால் அவர் 28 நாட்களுக்குள் வெளியேற்றப்பட வேண்டும்.

ஆனால்,  அதே நபர் புகலிடம் கேட்டு அகதி என்ற அடிப்படையில் விண்ணப்பித்திருந்தால், இந்த விண்ணப்பம் குறித்த முடிவு எடுக்கப்பட்டால் மட்டுமே அவரை நாட்டை விட்டு வெளியேற்ற முடியும்.

அந்த வகையில் மல்லையா புகலிடம் கேட்டு விண்ணப்பித்தாரா இல்லையா என்பது தெரியவில்லை. 

இதுதொடர்பாக விஜய் மல்லையா தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் தூபே பதில் ஏதும் அளிப்பதற்கு மறுத்து விட்டார்.  தன் மீதான குற்றச்சாட்டுகளை விஜய் மல்லையா தொடர்ந்து மறுத்து வருகிறார். வங்கிகளிடம் தான் பெற்ற கடனை 100 சதவீதம் திருப்பி செலுத்துவதாக அவர் கூறியுள்ளார். 

.