This Article is From Mar 31, 2020

“ஊரடங்கிலும் சம்பளம் கொடுக்குறேங்க…”- மத்திய அரசுக்கு விஜய் மல்லையாவின் 'புது ரிக்வஸ்ட்'!

2016 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் மல்லையா, இந்தியாவிலிருந்து தப்பியோடினார்.

“ஊரடங்கிலும் சம்பளம் கொடுக்குறேங்க…”- மத்திய அரசுக்கு விஜய் மல்லையாவின் 'புது ரிக்வஸ்ட்'!

“கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸுக்காக வங்கிகளிடமிருந்து வாங்கிய கடனை 100 சதவிகிதம் திருப்பித் தர நான் தயார் என்று மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறேன்"

ஹைலைட்ஸ்

  • ட்விட்டர் மூலம் கோரிக்கை வைத்துள்ளார் விஜய் மல்லையா
  • மல்லையா மீது அமலாக்கத் துறை வழக்குத் தொடர்ந்துள்ளது
  • அவரை நாட்டுக்கு அழைத்து வர மத்திய அரசு தொடர்ந்து முயன்று வருகிறது
London:

தனக்கு சொந்தமாக இருக்கும் அனைத்து நிறுவனங்களும், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்டு விட்டதாகவும், இதனால் நிறுவன ஊழியர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என்றும் வெளிநாட்டுக்குத் தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையா, மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். 

தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மல்லையா, “இந்தியா முழுவதற்கும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து நினைக்க முடியாத விஷயத்தைச் செய்துள்ளது மத்திய அரசு. அதை நாங்கள் மதிக்கிறோம். இதனால், என்னுடைய அனைத்து நிறுவனங்களும் தங்கள் பணிகளை நிறுத்தியுள்ளன. அனைத்து உற்பத்திகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அப்படி இருந்தும் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பவில்லை. தினமும் வேலை கொடுக்காமல் அவர்களுக்குச் சம்பளம் வழங்கி வருகிறோம். இதற்கு அரசு முன் வந்து உதவி செய்ய வேண்டும்” என்றார். 
 

இந்திய வங்கிகளிடமிருந்து கடன் வாங்கி விட்டு, அதை திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டு ஓடிவிட்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளார் விஜய் மல்லையா. கிட்டத்தட்ட 9,000 கோடி ரூபாய் பண மோசடியில் மல்லையா ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து தப்பியோடிய மல்லையா, தற்போது இங்கிலாந்தில்தான் வசித்து வருகிறார். அங்கிருந்தபடியே தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் மூலம் சந்தித்து வருகிறார் மல்லையா.

அவரை நாட்டுக்கு அழைத்து வர அமலாக்கத் துறை தொடர்ந்து முயன்று வருகிறது. தன் மீது மத்திய அரசு சுமத்தியுள்ள குற்றச்சாடுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி மல்லையா தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் விசாரணைக்கு வந்த அந்த வழக்கை, இந்த மாத இறுதிக்கு ஒத்திவைத்திருந்தது நீதிமன்றம். 

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மல்லையா, “கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸுக்காக வங்கிகளிடமிருந்து வாங்கிய கடனை 100 சதவிகிதம் திருப்பித் தர நான் தயார் என்று மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறேன். அதை வங்கிகளும், அமலாக்கத் துறையும் ஏற்க மறுக்கின்றன. இதைப் போன்ற இக்கட்டான சூழ்நிலையில் மத்திய நிதி அமைச்சர் என் வேண்டுகோளை ஏற்றுக் கொள்வார் என நம்புகிறேன்,” என்று கூறியுள்ளார். 

2016 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் மல்லையா, இந்தியாவிலிருந்து தப்பியோடினார். தற்போது மல்லையாவுக்கு 63 வயதாகிறது. 

.