வேலூர் மக்களவை தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! திங்களன்று வாக்குப்பதிவு!!

2019 மக்களவை தேர்தலில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூரை தவிர்த்து மற்ற அனைத்து மக்களவை தொகுதிகளிலும் தேர்தல் நடத்தப்பட்டது.

வேலூர் மக்களவை தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! திங்களன்று வாக்குப்பதிவு!!

திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் - அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

மக்களவைத் தேர்தலையொட்டி வேலூரில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நடந்து வந்த அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது. நாளை மறுதினமான திங்கட் கிழமையன்று வேலூர் மக்கள் தங்களது தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வேலூரை தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதுடன், கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் அளித்து ஆட்சி நடத்தி வருகிறது. 

பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூரில் தேர்தல் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஆகஸ்ட் 5-ம்தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி கடந்த மாதம் 11 முதல் 18-ம்தேதி வரை வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர், 22-ம்தேதி மனுக்களை திரும்பப் பெறுவோர் பெற்றுக் கொண்டனர். 

இந்த தேர்தலில் திமுக சார்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணி தரப்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஏ.சி. சண்முகம் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதையொட்டி திமுக தரப்பில் கட்சி தலைவர் ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர். ஏ.சி. சண்முகத்துக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் வாக்கு சேகரித்தனர். 

தேர்தல் பிரசாரத்தின்போது ஏ.சி. சண்முகத்தை பாஜக கண்டு கொள்ளாதது சர்ச்சையாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. தேர்தல் பிரசாரம் நிறைவுபெற்றதை தொடர்ந்து தேர்தல் ஆணையம் விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி தொகுதிக்கு வெளியில் இருந்து பிரசாரத்திற்கு அழைத்து வரப்பட்ட அரசியல் கட்சியினர் இன்று மாலை 6 மணிக்குள் வெளியேறி விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 

நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆகஸ்ட் 9-ம்தேதியான வெள்ளியன்று முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.