Hyderabad: பிரதமர் மோடியைக் கொல்ல திட்டம் தீட்டியதாக மாவோயிஸ்ட் கொள்கைகள் சார்ந்து எழுதும் எழுத்தாளர் வரவரா ராவ் கைது செய்யப்பட்டுள்ளார். புனேவில் இருந்து வந்த காவல் துறை குழு அவரது வீட்டையும், உறவினர்கள் மற்றும் பத்திரிக்கையாளர் ஒருவரின் வீட்டையும் சோதித்து ராவை கைது செய்து சென்றதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அரசு காந்தி மருத்துவமனையில் முதலில் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். புனே அழைத்துச் செல்லும் முன், நீதிமன்றத்தில் அவர் ஆஜர் படுத்தப்படுவார் என்று தெரிகிறது.
ஜூன் மாதம் நடந்த பீமா கோரேகான் வன்முறை தொடர்பாக, கைது செய்யப்பட்ட 5 பேரில், ஒருவரின் வீட்டில், பிரதமரைக் கொல்ல திட்டம் தீட்டப்பட்டிருந்த கடிதம் ஒன்று கிடைத்தது.
R என்ற குறிப்பிடப்பட்டிருந்த நபர் எழுதிய அந்தக் கடிதத்தில், ராஜிவ் காந்தியை கொன்றது போல மோடியை கொல்ல வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும், 8 கோடி மதிப்பில் எம்-4 ரக துப்பாக்கியும்,4 லட்சம் ரவுண்ட் புல்லட்களும் வாங்குவது பற்றியும் எழுதப்பட்டிருந்திருக்கிறது. அந்த கடிதத்தில், வரவரா ராவின் பெயரும் இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
கோரேகான் கலவரத்தில் கைது செய்யப்பட்ட 5 பேரும் ஏழை மக்களுக்காக உழைத்து வந்தார்கள் என்றும், அவர்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையில்லை என்று ராவ் எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.