This Article is From Mar 31, 2020

பிப்.1 முதல் காலாவதியான ஓட்டுநர் உரிமங்கள் ஜூன் 30 வரை செல்லும்: மத்திய அரசு

ஊரடங்கு அமல்படுத்த ஒரு வாரம் முடிய உள்ள நிலையில், அரசு போக்குவரத்து அலுவலகங்கள் மூடப்பட்டதன் காரணமாக இந்த மோட்டார் வாகனங்களின் ஆவணங்களைப் புதுப்பிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

பிப்.1 முதல் காலாவதியான ஓட்டுநர் உரிமங்கள் ஜூன் 30 வரை செல்லும்: மத்திய அரசு

Coronavirus: ஊரடங்கு காரணமாக ஓட்டுநர் உரிமங்களை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.(Representational)

ஹைலைட்ஸ்

  • ஊரடங்கு காரணமாக ஓட்டுநர் உரிமங்களை புதுப்பிக்க கால அவகாசம்
  • ஜூன்.30ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
  • மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஆவணங்கள் ஜூன் 30 வரை செல்லும்
New Delhi:

பிப்.1ம் தேதி காலாவதியான ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட பிற மோட்டார் வாகன ஆவணங்களை புதுப்பிக்க ஜூன்.30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்கள் ஜூன் 30ம் தேதி வரை செல்லுபடியாகும் என்பதை பரிசீலிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. 

வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக கடந்த வாரம் முதல் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு அமல்படுத்த ஒரு வாரம் முடிய உள்ள நிலையில், அரசு போக்குவரத்து அலுவலகங்கள் மூடப்பட்டதன் காரணமாக இந்த மோட்டார் வாகனங்களின் ஆவணங்களை புதுப்பிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. 

இதனால், சிரமங்களை எதிர்கொள்ளும் மக்களுக்கு வசதியாக வாகனங்களின் ஃபிட்னஸ் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் அல்லது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வேறு எந்த ஆவணமாக இருப்பினும், ஜூன்.30ம் தேதி வரை அவை செல்லுபடியாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்காக செல்லும் நிறுவனங்கள், வாகனங்கள், மக்கள் உள்ளிட்ட யாரும் இன்னல்களுக்கு ஆளாக கூடாது என்றும், அனைத்து மாநிலங்களும் இந்த ஆலோசனையை அமல்படுத்துமாறும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. 

நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக எழுந்துள்ள பல்வேறு பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ளும் வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2018-19ம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய 2020 ஜூன் 30 வரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது. தாமதமாக செலுத்தப்படும் வருமான வரிக்கான வட்டி 12 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. ஆதார்-பான் இணைப்புக்கான கெடு மார்ச் 31 வரையிலிருந்தது, அது ஜூன் 30ம் தேதிக்கு நீட்டிக்கப்படுகிறது உள்ளிட்ட சில அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். 

அதைத்தொடர்ந்து, ஏழைகள், தொழிலாளர்கள் யாரும் பட்டினியால் வாடக்கூடாது என்பதற்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீட்டில்  பல்வேறு பொருளாதார திட்டங்கள் வரையறுக்கப்பட்டதாக அறிவித்தார்.

.