This Article is From Aug 22, 2018

தகவல் கசிவு: ஆதார் அமைப்பு மீது விசாரணை!

ஆதார் கார்டின் தகவல்களை கசியவட்டதாக குற்றம் சாட்டி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது

தகவல் கசிவு: ஆதார் அமைப்பு மீது விசாரணை!

ஹைலைட்ஸ்

  • யு.ஐ.டி.ஏ.ஐ அமைப்பிடம் டெல்லி நீதமன்றம் பதில் கேட்டுள்ளது
  • 6 வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு யு.ஐ.டி.ஏ.ஐ-க்கு தெரிவிக்கப்பட்டுள்ளது
  • தொடர்ந்து ஆதார் தகவல்கள் கசிந்து வரும் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது

ஆதார் கார்டை நிர்வகித்து வரும் யு.ஐ.டி.ஏ.ஐ அமைப்பு, ஆதார் கார்டின் தகவல்களை கசியவட்டதாக குற்றம் சாட்டி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த மனுவை விசாரிக்க நீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது. 

இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், யு.ஐ.டி.ஏ.ஐ அமைப்பை இன்னும் 6 வாரத்துக்குள் குற்றச்சாட்டுகளுக்கு பதில் மனுத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. அடுத்ததாக வழக்கு வரும் நவம்பர் 19 ஆம் தேதி விசாரிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருக்கும் 110 கோடி பேரின் பயோ-மெட்ரிக் தகவல்களை சேகரித்த அரசு, ஒவ்வொருவருக்கும் 12 டிஜிட் எண்ணை வழங்கியது. இந்த ஆதார் எண், வங்கி கணக்கு முதல் காஸ் சிலிண்டர் பெறுவது உள்ளிட்ட பல அடிப்படை விஷயங்களுக்கு அவசியமானது என்று அரசு கூறியது. மக்களும் ஆதார் எண்ணைப் பயன்படுத்தத் தொடங்கினர். ஆனால், தொடர்ந்து ஆதார் கார்டு தகவல்கள் பொது வெளியில் கசிந்து வருவது குறிப்பிடத்தக்கது. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தவே, இது குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மக்களின் பயோ-மெட்ரிக் தவகல்கள் 13 அடி சுவர் கொண்டு பாதுகாக்கப்பட்டு வருவதாக யு.ஐ.டி.ஏ.ஐ அமைப்பு தகவல் தெரிவித்து வந்தாலும், ஆதார் தகவல்களின் பாதுகாப்பில் சந்தேகம் எழுந்துள்ளது. 

ஆதார் அமைப்புக்கு எதிரான மனுவில், ‘மக்களின் ஆதார் தகவல்களை நிர்வகித்து வரும் அமைப்பு, அதை பாதுகாப்பாக வைத்திருக்கவில்லை. இதனால், மக்களின் அடிப்படை உரிமை, தனிப்பட்டத் தகவல்கள் பாதுகாப்பு என பல உரிமைகள் மீறப்பட்டுள்ளன. எனவே, அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம், ‘ப்ரைவசி என்பது அடிப்படை உரிமை’ என்று கருத்து தெரிவித்தது. ஆதார் குறித்தான வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், சீக்கிரமே அது குறித்தான தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


 

.