This Article is From Jun 26, 2019

யானையை பிடிக்க கனவு கண்ட டிடிவியால் ஓணானை கூட பிடிக்க முடியவில்லை: ஜெயக்குமார்

யானையை பிடிக்க கனவு கண்ட டிடிவி தினகரனால் ஓணானை கூட பிடிக்க முடியவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

யானையை பிடிக்க கனவு கண்ட டிடிவியால் ஓணானை கூட பிடிக்க முடியவில்லை: ஜெயக்குமார்

அமமுக பொதுச்செயலாளர் தினகரன் குறித்து, அவரது நம்பிக்கைக்குரியவராக இருந்து வந்த தங்க தமிழ்ச்செல்வன் சர்ச்சைக்குறிய வகையில் பேசியதை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் வார்த்தை போர் முற்றிய நிலையில், தங்க தமிழ்ச்செல்வனை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து முடிவு தான் முடிவு செய்ய உள்ளதாகவும், புதிய கொள்கை பரப்புச்செயலாளரை தேர்வு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தங்கதமிழ்ச்செல்வன் கூறும்போது, கட்சிக்கான வேலையை மட்டும் தலைமை பார்க்க வேண்டும். அதைவிட்டுவிட்டு என்னை பற்றி அவதூறு பரப்புகிறார் டிடிவி.

18 எம்.எல்.ஏக்களின் பதவிக்கு எந்த உத்திரவாதமும் இல்லை. அவர்களின் குடும்பங்கள் எவ்வளவு வேதனையில் உள்ளது தெரியுமா? வேலுமணியிடமும் தங்கமணியிடமும் நான் பேசியதே இல்லை. அவர்கள் என்னை ஆட்டிப்படைப்பதாக டிடிவி கூறுகிறார்.

கருத்துக்களை கேட்கவில்லை என்றால் விமர்சனங்களை வைக்கத்தான் செய்வேன். அதை தலைமையில் இருப்பவர் தாங்கிக்கொள்ள வேண்டும். கூப்பிட்டு பேச வேண்டும். டிடிவியிடம் பெட்டி பாம்பாக அடங்குவதற்கு என்ன இருக்கு. இவரு எனக்கு என்ன சோறு போடுறாரா. தராதரம் இல்லாத பேச்சு பேசக்கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, அமமுகவின் நிலை மிகவும் பரிதாபமாக இருக்கிறது. அமமுகவில் இருக்கும் 4 பேரும் கட்சியில் இருந்து வெளியே வர தயாராக உள்ளனர்.

கொள்கை, கோட்பாடு, லட்சியம் இல்லாத கட்சி அமமுக பணம் மட்டுமே பிரதானம் என்பது கிடையாது என தமிழக மக்கள் அமமுகவிற்கு பாடம் புகட்டி உள்ளனர். காற்றில் கரைந்த டீசல் போல் தான் அக்கட்சியின் நிலை. வைகோ திமுகவை கடுமையாக விமர்சித்தார் ஆனால் அவர் திமுகவுடன் கூட்டணியில் தான் இருக்கிறார்.

ரிங் மாஸ்டர் என்று நினைத்துக்கொண்டு எல்லோரையும் ஆட்டிபடைக்கலாம் என்று நினைத்தார். ஆனால், தற்போது அந்த ரிங் மாஸ்டர் மீதே எல்லோரும் சீற ஆரம்பித்து விட்டனர். சசிகலா, தினகரன் தவிர்த்து அமமுகவில் இருந்து யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்.

அமமுகவில் இருந்து பலரும் அதிமுகவிற்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். தங்க தமிழ்ச்செல்வனை கட்சியில் இணைப்பது குறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும். அவர் அதிமுகவில் இணைய யாரும் முட்டுக்கட்டையாக இருக்க மாட்டார்கள் என கூறினார். என்று அவர் கூறியுள்ளார்.

.