This Article is From Aug 14, 2019

மம்தாவின் வலதுகரம் சோபன் சாட்டர்ஜி பாஜகவில் இணைந்தார்! திரிணாமூல் தொண்டர்கள் அதிர்ச்சி!!

சோபன் சாட்டர்ஜி 2 முறை கொல்கத்தாவின் மேயராக இருந்துள்ளார். மம்தாவின் நம்பிக்கைக்குரியவரான அவர், சிறு வயது முதலே திரிணாமூல் காங்கிரசில் பணியாற்றி வந்தார்.

பெகாலா சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.வாக சோபன் சாட்டர்ஜி இருக்கிறார்.

New Delhi:

மம்தாவின் வலது கரமாக இருந்து வந்த கொல்கத்தா முன்னாள் மேயர் சோபன் சாட்டர்ஜி பாஜகவில் இணைந்துள்ளார். இதனால் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

ஆட்சி இல்லாத மாநிலங்களில் வளர்ச்சியை ஏற்படுத்தும் நடவடிக்கையில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்தில் கட்சியை வளர்க்கும் பணியில் மூத்த தலைவர்கள் இறங்கியுள்ளனர். இதன் விளைவாக 2014 மக்களவை தேர்தலின்போது 2 இடங்களை மட்டுமே கைப்பற்றி இருந்த பாஜக, தற்போது நடந்து முடிந்த தேர்தலில் 18 தொகுதிகளில் வென்றுள்ளது. 

இதன் தொடர்ச்சியாக 2021-ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் பாஜக தலைவர்கள் இறங்கியுள்ளனர். இதன்படி முன்னாள் ரயில்வே அமைச்சரும், மம்தாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்த முகுல் ராயை பாஜக தன் பக்கம் இழுத்தது. இதனால் பெரும் அதிர்ச்சியில் திரிணாமூல் தொண்டர்கள் இருந்தார்கள். 

இந்த நிலையில் கொல்கத்தா முன்னாள் மேயரும் மம்தாவின் நம்பிக்கைக்கு உரியவரான சோபன் சாட்டர்ஜி தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். இது மம்தா கட்சிக்கு விழுந்த மற்றொரு அடியாக பார்க்கப்படுகிறது. 

சோபன் சாட்டர்ஜி சிறு வயது முதலே திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்தார். அடுத்த ஆண்டு கொல்கத்தா மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சோபன் பாஜகவில் சேர்ந்துள்ளார். 

மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து திரிணாமூல் காங்கிரசை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒருவர் ஆகியோர் பாஜகவில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

.