This Article is From Jul 08, 2018

2 வாரங்களாக குகைக்குள் சிக்கியுள்ள சிறுவர்கள்… மீட்புப் பணித் தொடக்கம்!

தாய்லாந்து நாட்டில் 9 நாட்கள் குகைக்குள் சிக்கித் தவித்த கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்கள் சில நாட்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டனர்

2 வாரங்களாக குகைக்குள் சிக்கியுள்ள சிறுவர்கள்… மீட்புப் பணித் தொடக்கம்!
Mae Sai, Thailand:

தாய்லாந்து நாட்டில் 9 நாட்கள் குகைக்குள் சிக்கித் தவித்த கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்கள் சில நாட்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டனர். இன்னும் குகைக்குள் இருந்து வரும் நிலையில், அவர்களை பத்திரமாக மீட்டுக் கொண்டு வரும் பணி தொடங்கியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி சிறுவர்கள் நிறைந்த ஒரு கால்பந்து அணி, தங்களது பயிற்சியாளருடன் தாய்லாந்தில் இருக்கும் சியாங் ராய் பகுதியில் உள்ள தம் லுவாங் குகைக்குச் சென்றுள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக குகைக்குள் அவர்கள் அனைவரும் மாட்டிக் கொண்டுள்ளனர். தாய்லாந்தில் ஜூலை மாதங்களில் அடை மழை பெய்யும். இந்த நேரத்தில் தம் லுவாங் குகைக்குள் செல்வது பாதுகாப்பனதல்ல என்று கூறப்படுகிறது. ஆனால், கால்பந்து குழுவினர் சரியாக இந்த நேரத்தில் சென்றது தான் அவர்கள் உள்ளேயே மாட்டிக் கொண்டதற்குக் காரணமாக இருந்துள்ளது. சிறுவர்கள் அனைவரும் பதின் பருவத்தினர்.

thailand cave letters

சிறுவர்கள், தங்கள் குடும்பங்களுக்கு எழுதிய கடிதங்கள்...

இந்த விவகாரம் தாய்லாந்தில் மட்டுமல்ல உலக அளவில் கவனம் பெற்றது. சம்பவம் குறித்து வெளியே தெரிய ஆரம்பித்த உடன், உலகின் பல்வேறு மூலைகளிலிருந்து குகையில் சிக்கி இருப்பவர்களை மீட்பதற்காகவே பயிற்சி பெரும் நபர்கள் சிறுவர்களைத் தேட ஆரம்பித்துள்ளனர். பல நாட்டு அரசுகளும் சிறுவர்களை மீட்க நிபுணர்களை அனுப்பி வைத்தது.

இந்நிலையில் 9 நாட்கள் குகையில் இருந்த 12 சிறுவர்கள் மற்றும் 25 வயதாகும் அவர்களின் கோச் ஆகியோர் கண்டுபிடிக்கப்பட்டனர். இன்னும் அவர்கள் குகையிலிருந்து வெளியே வரவில்லை. இந்நிலையில் அவர்களை ஒவ்வொருவராக மீட்டுக் கொண்டு வரும் பணி தொடங்கியுள்ளது. 

சிறுவர்களை கண்டுபிடித்ததை விட அவர்களை மீட்டுக் கொண்டு வருவது மிகவும் கடனிமான காரியம் என்று சொல்லப்பட்டது. அதற்கு ஏற்றாற் போல தாய்லாந்து சீல் படை வீரர் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார். தொடர்ந்து குகை இருக்கும் பகுதியில் மழை பெய்து வருகிறது.

இது குறித்து மீட்புப் பணிக்குத் தலைமை வகிக்கும் நாரோங்சாக், ‘இன்று தான் மீட்புப் பணி தொடங்க உள்ள நாள். சிறுவர்கள் அனைத்து சவால்களுக்கும் தயாராக இருக்கின்றனர். இன்று, இப்போதே அதற்கான பணிகளை ஆரம்பிக்க வேண்டும். நமக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காமலேயே போகலாம். இரண்டு வீரர்களை சேர்ந்து ஒவ்வொரு சிறுவர்களாக குகையில் இருந்து வெளியே கொண்டு வருவர். இந்த சாத்தியமற்ற வேலையை அனைவரும் இணைந்து செய்வோம்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

குகைக்கு உள்ளே இருந்தபடியே சிறுவர்கள், அவர்களின் குடும்பத்தாருக்கு கடிதங்பகள் எழுதியுள்ளனர். அவர்கள், ‘யாரும் எங்கள் நிலைமை குறித்து கவலைப்பட வேண்டாம். வீட்டுக்கு வரும் போது எங்களுக்குப் பிடித்த உணவை மட்டும் சமைத்துக் கொடுங்கள்’ என்று உற்சாகமாக எழுதியுள்ளனர்.

மேலும் சிறுவர்கள் அங்கம் வகிக்கும் கால்பந்து அணியின் பயிற்சியாளரும் எக்காபோல், ‘அனைத்து பெற்றோர்களுக்கும் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் குழந்தைகளை பத்திரமாக மீட்டுக் கொண்டு வருவேன்’ என்றுள்ளார். 

 

.