This Article is From Dec 22, 2018

தலை, மார்பில் சுடப்பட்ட ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் – ஆய்வில் அதிர்ச்சி

வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் நடந்த போராட்டத்தின்போது, 13 பேர் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் உயிரிழந்தனர்.

தலை, மார்பில் சுடப்பட்ட ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் – ஆய்வில் அதிர்ச்சி

இந்தியாவில் நடந்த சுற்றுச்சூழல் மாசுக்கு எதிரான மிகப்பெரும் போராட்டமாக ஸ்டெர்லைட் போராட்டம் பார்க்கப்படுகிறது.

ஹைலைட்ஸ்

  • சுட்டுக்கொல்லப்பட்ட 13 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது
  • பிரதே பரிசோதனையை அளிக்குமாறு சிபிஐ கோரவில்லை என தகவல்
  • இடுப்பு கீழேதான் சுட வேண்டும் என்று விதி உள்ளது.
Thoothukudi:

ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது உயிரிழந்த 13 பேரில் 12-பேர் தலை, மார்புகளில் துப்பாக்கி குண்டு துளைத்து உயிரிழந்ததாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் பின்பக்கத்தில் குண்டுகள் பாய்ந்துள்ளதாகவும், ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோன்று 2 பேரின் தலையில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து உயிரிழப்பு சம்பவம் நடந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை ஆய்வு செய்துள்ள ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், உயிரிழப்பு தொடர்பான தகவல்களை வெளியிட்டிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மே மாதத்தின்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பெரும் போராட்டம் வெடித்தது. இதனை கட்டுப்படுத்துவதாக கூறி போலீசார் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இதில் 13 பேர் உயிரிழந்தார்கள்.  இவர்களில் 17 வயது சிறுவன் ஜே.ஸ்னோலின்  என்பவரது  தலையிலும்,  வாயிலும் குண்டுகள் துளைத்திருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

sterlite reuters

அவரது  உடலை ஆய்வ செய்த மருத்துவர்கள், ‘'நெஞ்சு அடைப்பு காரணமாக ஸ்னோலின் உயிரிழந்துள்ளார். இந்த நெஞ்சு அடைப்பு கழுத்தின் பின்புறம் துப்பாக்கித் தோட்டா துளைத்ததால் ஏற்பட்டதாகும்'' என்று குறிப்பு எழுதியுள்ளார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் ஸ்னோலின் குடும்பத்தை சந்தித்தபோது, ‘'சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கையை பெறவில்லை'' என்று சிறுவனின் தாயார் தெரிவித்தார்.

இந்தியாவில் வன்முறையை கட்டுப்படுத்துவதற்கு துப்பாக்கி குண்டு போன்ற வெடி பொருட்களை பயன்படுத்துவதற்கு சட்டம் அனுமதி அளிக்கிறது. ஆனால், மக்களை சுட்டுக் கொல்வதற்கு அனுமதி இல்லை. தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விவகாரத்தில், வன்முறையாளர்களின் இடுப்புக்கு கீழே குறி வைத்துதான் துப்பாக்கியால் சுட்டதாகவும், மக்களை அச்சுறுத்துவதற்காக மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை ஐ.நா. சபையின் மனித உரிமை வல்லுனர்களும் கண்டித்துள்ளனர். அபாயகரமான ஆயுதங்களை போலீசார் உபயோகித்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது என்று அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

anti sterlite protest police action pti 650

13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக எந்தவொரு போலீசாரும் கைது செய்யப்படவில்லை. அல்லது அவர்கள் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை. காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழக அரசு  வெளியிட்ட அறிக்கையில், ‘'தவிர்க்க முடியாத காரணங்களால், கலவரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது'' என்று கூறியுள்ளனர்.

அதேநேரத்தில்  பிரேத பரிசோதனை அறிக்கையை அளிக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும் கேட்கவில்லை. வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகளும், பிரேத  பரிசோதனை அறிக்கையை பெறுவதற்கு முயற்சி ஏதும் மேற்கொள்ளவில்லை.

இதுதொடர்பாக வேதாந்தா நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது  அவர்கள் தரப்பில் ஏதும் பதில் அளிக்கவில்லை. இந்த துப்பாக்கிச் சூட்டுக்கும், வேதாந்தா நிறுவனத்திற்கும் சம்பந்தம் ஏதும் இல்லாத நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வேதாந்தா நிறுவனம் இரங்கல் வெளியிட்டுள்ளது.

சம்பவம் நடந்த தினத்தன்று அங்கிருந்த 4 மூத்த போலீஸ் அதிகாரிகளும், 2 அரசு அதிகாரிகளும் ராய்ட்டர் நிறுவனத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அவர்கள் தாங்கள் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டதாக கூறியுள்ளனர்.

ராய்ட்டர் வெளியிட்டிருக்கும் பிரேத பரிசோதனை தகவலின் அடிப்படையில் கொல்லப்பட்டவர்களில் 8 பேரின் பின்பக்கத்தில் இருந்து தலை மற்றும் உடலுக்குள் தோட்டாக்கள் பாய்ந்துள்ளன. அவர்களில் ஜான்சி என்பவர் தனது வீட்டிலிருந்து சில நூறு மீட்டர் தொலைவில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். அவரது காதின் வழியே தோட்டா பாய்ந்து சென்றுள்ளது. 

 

anti sterlite protest

34 வயதுடைய மணி ராஜன் என்பவரது முன் நெற்றியில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. அவரது பிரேத பரிசோதனை ஆய்வில், ''வலதுபக்க நெற்றியின் வழியே துப்பாக்கி குண்டு தலையின் உள்ளே சென்றதால் மூளையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


உயிரிழந்தவர்களில் ஒருவர் 50 வயதும், 6 பேர் 40 வயதும், 3 பேர் 20 வயதும் மதிக்கத்தக்கவர்கள். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் வைத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுபற்றி கல்லூரியை சேர்ந்த மருத்துவர்கள் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர். 
ராய்ட்டர் செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில், உயிரிழந்த 13 பேரில் 11 பேரின் குடும்பத்தை மட்டுமே தொடர்பு கொள்ள முடிந்தது. அவர்களில் 10 பேர் இந்த விவகாரம் தொடர்பாக சட்ட நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளனர். ஒருவரது குடும்பத்தினர் வழக்கறிஞருடன் தொடர்பில் உள்ளனர். மற்ற 2 பேரின் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

 
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணை இப்போதைக்குள் முடிந்து விடாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 


துப்பாக்கிச் சூட்டின்போது 15 துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 3 எஸ்.எல்.ஆர். எனப்படும் self-loading rifles (SLR) வகையை சேர்ந்தது. மொத்தம் 69 தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 30 தோட்டாக்கள் எஸ்.எல்.ஆர். துப்பாக்கிகளில் இருந்து பாய்ந்துள்ளன. ஆவணங்களின்படி இந்த தகவல்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. 
 

.