TN Rain News: 'சென்னை நகரத்தைப் பொறுத்தவரை வானம், மேகமூட்டத்துடன் இருக்கும். ஆங்காங்கே லேசான மழை பெய்யலாம்.'
TN Rain News: தமிழகத்தின் பல மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம், வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “வளிமண்டலத்தில் நிலவும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்யும்.
ணென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை நகரத்தைப் பொறுத்தவரை வானம், மேகமூட்டத்துடன் இருக்கும். ஆங்காங்கே லேசான மழை பெய்யலாம்.
கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கடலூர் மாவட்டத்தின் பரங்கிப்பேட்டையில் 3 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல வானிலை வல்லுநர், தமிழ்நாடு வெதர்மேன், பிரதீப் ஜான், சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் ‘சர்ப்ரைஸ் மழை' குறித்து, “1995 ஆம் ஆண்டுக்குப் பிறகு சென்னையில், ஜனவரி மாதம் பெய்யும் அதிகபட்ச மழை இதுவேயாகும். நாளைக்கும் சென்னை நகரில் மழை பெய்யும். ஜனவரி 9 ஆம் தேதியன்று நமது வடகிழக்குப் பருவமழைக் காலம் முற்றிலும் முடிவுக்கு வரும்.
கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான குறைவான மழை பொழிவை இப்போது பெய்துள்ள மழை நிவர்த்தி செய்துள்ளது. குறிப்பாக தென் சென்னையில் நிலத்தடி நீர் நல்ல அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு எந்த வித பெரு வெள்ளமோ, புயலோ இல்லாமலேயே சென்னையில் நீர் பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழையின் கடைசி 2 நாட்களை அனுபவிப்போம். அதன் பிறகு மழைக்கு பிரேக்தான்,” என்று தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.