This Article is From Aug 04, 2020

உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று: WHO அமைப்பு சொல்வது என்ன?

சீனாவின் உஹான் நகரில் முதன்முதலாக தோன்றியது கொரோனா வைரஸ் தொற்று. அப்போதிலிருந்து இந்த வைரஸ் தொற்றால், 18.1 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று: WHO அமைப்பு சொல்வது என்ன?

இந்த கொரோனா வைரஸானது, சீனாவில் உள்ள உஹானின் ஒரு விலங்கு விற்பனை சந்தையிலிருந்து மனிதர்களுக்குப் பரவியதாக சந்தேகம் கொள்கின்றனர் விஞ்ஞானிகள். 

ஹைலைட்ஸ்

  • கடந்த டிசம்பர் மாதம், கொரோனா தொற்றுப் பரவல் ஆரம்பித்தது
  • அமெரிக்காதான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு
  • அமெரிக்காவை அடுத்து பிரேசில் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது
Geneva:

கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று, உலகின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் அது பற்றி உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கெப்ரியஸஸ், விளக்கமாக பேசியுள்ளார். 

அவர், “உலகில் உள்ள அரசுகளுக்கும் மக்களுக்கும் நாங்கள் சொல்லிக் கொள்வது சில அடிப்படையான விஷயங்கள்தான். கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள தொடர்ந்து சோதனை செய்யுங்கள், தொற்றுப் பரவலுக்கான நபர்களைக் கண்டறியுங்கள், சமூக விலகல் விதிமுறைகளைக் கடைப்பிடியுங்கள், பொது வெளியில் முகக் கவசம் அணியுங்கள் என்கிற அடிப்படையான சில செயல்பாடுகளைப் பின்பற்றுங்கள்.

தற்போது உலகளவில் பல கொரோனா தடுப்பு மருந்துகள், சோதனையின் இறுதிக் கட்டத்தில் உள்ளன. இதன் மூலம் புதிதாக தொற்றுப் பரவாமல் பாதுகாக்க முடியும். ஆனால், தற்சமயம் அதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை. அப்படியொரு வாய்ப்பு வராமல் கூட போகலாம்.

தற்போதைய சூழலில் தொற்றுப் பரவலை சமாளிக்க அடிப்படை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். எனவே அதை கண்டிப்பாகச் செய்யுங்கள்” என்று விளக்கமாக தெரிவித்துள்ளார். 

கடந்த டிசம்பர் மாதம், சீனாவின் உஹான் நகரில் முதன்முதலாக தோன்றியது கொரோனா வைரஸ் தொற்று. அப்போதிலிருந்து இந்த வைரஸ் தொற்றால், 18.1 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,90,000 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தகவல் சொல்கிறது. 

இப்படியான சூழலில்தான், இந்த கோவிட்-19 வைரஸ் தொற்று எப்படி மனிதர்களுக்குப் பரவியது என்பது குறித்து புலனாய்வு செய்ய உலக சுகாதார அமைப்பு, சீனாவை வலியுறுத்தி வந்தது. 

இந்தப் பணியைச் செய்ய, உலக சுகாதார அமைப்பு சார்பில், கடந்த ஜூலை 10 ஆம் தேதி, இரண்டு சுகாதார வல்லுநர்கள் சீனாவுக்கு அனுப்பப்பட்டனர். அவர்களின் பணி தற்போது நிறைவடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு சொல்கிறது. 

இது பற்றி அதோனம், “வைரஸின் தோற்றம் குறித்து ஆய்வு செய்யச் சென்ற உலக சுகாதார அமைப்பின் வல்லுநர்கள், அவர்களின் பணியை முடித்துவிட்டார்கள். இனி அடுத்தகட்ட கூட்டாய்வைத் தொடங்க வேண்டும். இதற்காக சர்வதேச வல்லுநர்கள் குழு அமைக்கப்பட வேண்டும். அந்தக் குழுவில் உலகின் முன்னணி விஞ்ஞானிகள் மற்றும் சீனாவின் ஆய்வாளர்கள் இடம் பெறுவார்கள். உஹானில் அந்தக் குழுத் தங்களது ஆய்வைத் தொடங்கும். இந்த ஆய்வின் மூலம் நீண்ட கால புரிதல் ஏற்படும்” எனக் கூறியுள்ளார். 

இந்த கொரோனா வைரஸானது, சீனாவில் உள்ள உஹானின் ஒரு விலங்கு விற்பனை சந்தையிலிருந்து மனிதர்களுக்குப் பரவியதாக சந்தேகம் கொள்கின்றனர் விஞ்ஞானிகள். 

சீனத் தரப்பும் இதை ஒப்புக் கொள்ளும் வகையிலேயே கருத்து தெரிவித்துள்ளது. ஆனால், இதுவரை அதற்கான வலுவான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. 

.