‘அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்குத் தடை விதிக்கப்படும்’- டிரம்ப் திட்டவட்டம்!

செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், “டிக் டாக் செயலியைப் பொறுத்தவரை, அதற்கு சீக்கிரமே அமெரிக்காவில் தடை விதிக்கப்படும்” எனக் கூறியுள்ளார். 

‘அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்குத் தடை விதிக்கப்படும்’- டிரம்ப் திட்டவட்டம்!

இந்தியாவில் டிக் டாக் செயலிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Washington DC:

அமெரிக்காவில் மிகவும் பிரபலமாகி வரும் சீன செயலியான டிக் டாக்கிற்கு கூடிய விரைவில் தடை விதிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சீன உளவுத் துறையால் டிக் டாக் செயலியில் இருக்கும் தகவல்கள் பயன்படுத்தப்படும் என்று அமெரிக்க அரசு தரப்பினர் கூறியதைத் தொடர்ந்து டிரம்ப், இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், “டிக் டாக் செயலியைப் பொறுத்தவரை, அதற்கு சீக்கிரமே அமெரிக்காவில் தடை விதிக்கப்படும்” எனக் கூறியுள்ளார். 

அமெரிக்க அரசு தரப்பைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து, டிக் டாக் மீதும், அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் மீதும், சீன அரசுடன் தொடர்பு கொண்டள்ளுதாக குற்றம் சாட்டி வந்தனர். அதே நேரத்தில் பைட் டான்ஸ் நிறுவனம், இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளது. 

டிரம்ப் தடை பற்றி மேலும் பேசும்போது, “சனிக்கிழமையான இன்றே இது குறித்தான உத்தரவைப் பிறப்பிக்க அவசரகால அதிகாரத்தைப் பயன்படுத்துவேன்.” என்றுள்ளார். 

டிக் டாக் செயலிக்கு, உலகம் முழுவதும் சுமார் 100 கோடி பயனர்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில் டிரம்பின் இந்த அதிரடி கருத்து பற்றி டிக் டாக் தரப்பு, ஏஎப்பி செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “நீண்ட நாட்கள் செயல்பாடுகளைப் பொறுத்து டிக் டாக் செயலி, வெற்றிகரமாக இருக்கும் என்று நம்புகிறோம்.

பல லட்ச மக்கள் டிக் டாக் தளத்திற்கு பொழுது போக்கிற்காகவும், தொடர்புக்காகவும் வருகின்றனர். பலருக்கு இது வாழ்வாதாரம் தருகிறது.” என்றுள்ளது. 

டிக் டாக் நிறுவனத்தின் சிஇஓ, கெவின் மேயர், “நாங்கள் அரசியலுடன் சம்பந்தப்பட்டவர்கள் அல்ல. நாங்கள் அரசியல் சார்ந்த விளம்பரங்களை அனுமதிப்பதில்லை. எங்களுக்கென்று அரசியல் கொள்கை கிடையாது. எங்களின் ஒரே நோக்கம், தொடர்ந்து துடிப்புடன் இருந்து பலருக்கு பொழுது போக்கு வழங்கும் தளமாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே. டிக் டாக், மிகப் பெரிய டார்கெட்டாக மாறியுள்ளது. ஆனால், நாங்கள் எதிரி கிடையாது” என்று இந்த வாரத் தொடக்கத்தில் தெரிவித்திருந்தார். 

கடந்த 2017 ஆம் ஆண்டு, மியூசிக்கலி என்னும் அமெரிக்காவை மையமாக வைத்திருந்த செயலியை, டிக் டாக் நிறுவனம் வாங்கியது. அதைத் தொடர்ந்துதான் டிக் டாக்கின் புகழ் வேகமாக பரவியது.