Ayodhya hearing: ஜனவரி மாதம் தான் விசாரணை தேதி முடிவு செய்யப்பட உள்ளது
அயோத்யாவில் நிலவி வரும் நிலப் பிரச்னை தொடர்பான வழக்கில், விசாரணை தேதி ஜனவரி மாதம் முடிவு செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
1992 ஆம் ஆண்டு, ஆயோத்தியாவில் இருக்கும் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதியை, வலதுசாரி அமைப்பினர் இடித்தனர். அதற்கு அவர்கள், மசூதி இருக்கும் இடத்தில் தான் ராமர் பிறந்தார், எனவே அங்கு ராமருக்கு கோயில் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து அலாகாபாத் நீதிமன்றம் 2010-ல், மசூதி இருந்த இடத்தை 3 பகுதிகளாக பிரித்தது. அதில் ஒரு பகுதியை முஸ்லீம்களுக்கும் இன்னொரு பகுதியை இந்துகளுக்கும் கொடுத்தது நீதிமன்றம். இதில் நிலத்தின் முக்கியப் பகுதி இந்துகளுக்குத்தான் கொடுக்கப்பட்டது.
அலாகாபாத் நீதிமன்றத்தின் முடிவுக்கு எதிராக, இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், விசாரணை தேதி குறித்து ஜனவரி மாதம் முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், இது குறித்து உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதன் மூலம், ஜனவரி மாதமே அயோத்தியா தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வாய்ப்பு குறைவு தான் என்று கூறப்படுகிறது. லோக்சபா தேர்தல் முடிந்த பிறகு வழக்கு விசாரிக்கப்படக் கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. வழக்கு விசாரணை முன்னரே ஆரம்பித்தால், அதன் மூலம் பாஜக, தேர்தலில் பயனடையும் என்று சொல்லப்பட்டது.