This Article is From Aug 30, 2019

திமுக-வின் கொ.ப.செ ஆனார் தங்க தமிழ்ச்செல்வன்!

அதிமுக, எடப்பாடி அணி, சசிகலா அணி என்று பிரிந்தபோது, சசிகலாவுக்கு ஆதரவாக இருந்தார்

திமுக-வின் கொ.ப.செ ஆனார் தங்க தமிழ்ச்செல்வன்!

தினகரன், அமமுக என்ற புதிய கட்சியைத் தொடங்கிய பின்னரும் அதிலும் முக்கிய நிர்வாகியாக தங்கம் நியமிக்கப்பட்டார்

திராவிட முன்னேற்றக் கழகத்தில் சில மாதங்களுக்கு முன்னர் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வனுக்கு, கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகள் அதிமுக-வில் பல்வேறு முக்கிய பதவிகளில் இருந்தவர் தங்கம். அதிமுக, எடப்பாடி அணி, சசிகலா அணி என்று பிரிந்தபோது, சசிகலாவுக்கு ஆதரவாக இருந்தார். பின்னர் சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு, டிடிவி தினகரனுடன் ஐக்கியமானார். தொடர்ந்து தினகரன், அமமுக என்ற புதிய கட்சியைத் தொடங்கிய பின்னரும் அதிலும் முக்கிய நிர்வாகியாக தங்கம் நியமிக்கப்பட்டார். தேனி நாடாளுமன்றத் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்ட தங்க தமிழ்ச்செல்வன், படுதோல்வியைத் தழுவினார். தேர்தலுக்குப் பின்னர் அவருக்கும் தினகரனுக்கும் பல்வேறு விஷயங்களில் மோதல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவர் அண்ணா அறிவாலயத்துக்கு வந்து, கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தன்னை திமுக-வில் இணைத்துக் கொண்டார். 

o88ehg88

இந்நிலையில் தனக்கு கொ.ப.செ பதவி கொடுக்கப்பட்டது குறித்து தங்க தமிழ்ச்செல்வன், தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “நான் கட்சியில் சேர்ந்ததில் இருந்து எந்த டிமாண்டும் வைக்கவில்லை. இது மிகப் பெரிய பதவி. இதை வழங்கிய அண்ணன் ஸ்டாலினுக்கு நன்றி. நன்றாக செயல்படக் கூடிய நபர்களுக்கு பொறுப்பு கொடுத்து அழகு பார்ப்பதில் தப்பில்லை. மாற்றான் தோட்டத்துக்கு மல்லிகைக்கும் மணமுண்டு என்பதை புரிந்தவர் அண்ணன் ஸ்டாலின்” என்றார்.

தமிழ்ச்செல்வன், திமுக-வில் சேர்ந்து 2 மாதங்களாக ஆகியிருந்தாலும், அவருக்கு போதிய கவனம் கொடுக்கப்படவில்லை என்று கட்சிக்குள்ளேயே பேசப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில் அவரை உற்சாகப்படுத்தும் நோக்கில் இந்தப் பொறுப்பு வழங்கப்படுள்ளதாக பார்க்கப்படுகிறது. 

தங்க தமிழச்செல்வனைத் தவிர திருச்சி சிவா மற்றும் ஆ.ராசா ஆகியோரும் திமுக-வின் கொள்கை பரப்புச் செயலாளர்களாக தொடர்வார்கள் என்று கட்சி மேலிடம் அறிவித்துள்ளது. தங்க தமிழ்ச்செல்வனைப் போல அமமுக-விலிருந்து விலகி திமுக-வில் இணைந்த கலைராஜனுக்கும் இலக்கிய அணி இணைச் செயலாளர் பொறுப்பு வழங்க்கப்பட்டுள்ளது. 


 

.