This Article is From Nov 30, 2019

அந்த பெண் சகோதரிக்கே அழைத்தார், 100க்கு அழைக்கவில்லை: தெலுங்கானா அமைச்சர்

நடந்த சம்பவத்திற்காக நாங்கள் வருந்துகிறோம். அவர் ஒரு படித்த பெண், ஆனால் 100க்கு அழைப்பதற்கு பதிலாக அவரது சகோதரிக்கு அழைத்துள்ளார்.

சிசிடிவியில் கடைசியாக அந்த பெண் மருத்துவர் தெலுங்கான நெடுஞ்சாலையில் காணப்பட்டுள்ளார்.

Hyderabad:

ஐதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் எரித்துக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அந்த பெண் அவரது சகோதரிக்கு அழைத்ததற்கு பதில், 100க்கு அழைத்திருந்தால் இந்த சம்பவம் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என தெலுங்கானா அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தெலுங்கானா உள்துறை அமைச்சர் மொஹத் மஹமூத் அலி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, காவல்துறையினர் எச்சரிக்கையுடனும், குற்றங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டும் தான் இருக்கின்றனர், எனினும் நடந்த சம்பவத்திற்காக நாங்கள் வருந்துகிறோம். அவர் ஒரு படித்த பெண், ஆனால் 100க்கு அழைப்பதற்கு பதிலாக அவரது சகோதரிக்கு அழைத்துள்ளார். 

ஒருவேளை அவர் சகோதரிக்கு அழைப்பதற்கு பதிலாக, 100க்கு அழைத்திருந்தால் அவர் காப்பாற்றப்படிருப்பார். 100 என்பது ஒரு நட்பு எண், இது குறித்து நாங்கள் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். 

இதைத்தொடர்ந்து, அவரது கருத்தை என்டிடிக்கு தெளிவுப்படக் கூறினார். இது ஒரு மக்களுக்கான நட்பு முயற்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அவர் அவ்வாறு கூறியதாக தெரிவித்தார். 

மேலும், இதுபோன்ற அவசர காலங்களில் பெண்கள் அதனை பயன்படுத்த வேண்டும். அவர் என் மகள், நான் இன்று ஒரு மகளை இழந்துவிட்டேன். அந்த பெண் 100க்கு அழைத்திருந்தால், அவர் இன்று நம்முடன் இருந்திருக்கலாம் என்று அவர் கூறினார். 

இதனிடையே, கொலை செய்யப்பட்ட இளம் பெண் மருத்துவரின் தந்தை என்டிடிவிக்கு அளித்த பேட்டியில், அவர்கள் RGIA நகர்ப்புற காவல் நிலையத்தில் இருந்து கிராமப்புற காவல்நிலையத்திற்கும், பின்னர் அங்கிருந்து மீண்டும் நகர்ப்புற காவல்நிலையத்திற்கும் மாற்றி மாற்றி அலைக்கழிக்கப்பட்டதாகவும், சம்பவப் பகுதி யாருடைய அதிகார வரம்பில் வரும் என்பதில் காவல்துறையினர் குழப்பமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

அதன் பின்னரும், சம்பவ இடத்தின் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்ததற்கு பதிலாக உடனடியாக நேரடியாக சென்று தேடுதல் முயற்சியில் விரைவாக ஈடுபட்டிருந்தால் என் மகள் காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்று கூறினார். 

கடந்த புதன்கிழமையன்று ஐதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் தனது பணியை முடித்து வீடு திரும்பும் வழியில் மாயமாகியுள்ளார். இதையடுத்து, நடந்த விசாரணையில், சம்பவம் நடந்த அன்று மாலை நேரத்தில் தனது வீட்டில் இருந்து அவசர பணி காரணமாக மருத்துவனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற கால்நடை மருத்துவர் தனது வாகனத்தை சுங்கச்சாவடி அருகே நிறுத்திவிட்டு கால்டாக்சியில் சென்றுள்ளார்.  

இதையடுத்து, பணியை முடித்து 9 மணி அளவில் திரும்பி வந்த அவர், தனது இருசக்கர வாகனத்தை எடுத்தபோது, அது பஞ்சர் ஆகியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 9.15 மணி அளவில் தனது சகோதரிக்கு அந்த பெண் மருத்துவர் செல்போனில் தொடர்புகொண்டுள்ளார். அப்போது, தனது இருசக்கர வாகனம் பஞ்சர் ஆனதாகவும், அதனை சிலர் பஞ்சர் பார்த்து தருவதாக கூறி எடுத்துச்சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். 

எனினும், அங்கு சில லாரி ஒட்டுநர்கள் அநாகரிமான முறையில் பார்த்து வருவதாகவும் இதனால், தனக்கு பயமாக இருப்பதாகவும் சகோதரியிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சில நிமிடங்களிலேயே அவரது போன் சுவிட்ச் ஆஃப் ஆகியுள்ளது என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

தொடர்ந்து, இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய 4 லாரி ஓட்டுநர்கள் கைது செய்யபட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

.